நவி மும்பை,
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்த போட்டியில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 339 ரன் இலக்கை இந்திய அணி 48.3 ஓவரில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 341 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஜெமிமா ரோட்ரிக்ஸ் 127 ரன் எடுத்தார்.
இந்த போட்டியில் இந்திய அணி சில சாதனைகளை படைத்துள்ளது. அதன் விவரம் வருமாறு,
•இந்திய அணி உலகக் கோப்பையில் இதற்கு முன்பு 200 ரன்களுக்கு மேலான இலக்கை கூட சேசிங் செய்ததில்லை. இப்போது 339 ரன்களை செமஜோராக எட்டிப்பிடித்து இருக்கிறது.
•ஆண்கள் மற்றும் மகளிர் ஒரு நாள் போட்டி உலகக் கோப்பையை எடுத்துக் கொண்டால், நாக்-அவுட் சுற்றில் இதற்கு முன்பு எந்த அணியும் 300 ரன்களுக்கு மேலான இலக்கை விரட்டிப்பிடித்ததில்லை.
ஆண்கள் உலகக் கோப்பையில் 2015-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான அரைஇறுதியில் நியூசிலாந்து அணி 298 ரன் இலக்கை எட்டியதே இந்த வகையில் அதிகபட்சமாக இருந்தது.
அவற்றை எல்லாம் தகர்த்து இப்போது இந்தியா அச்சாதனையை தன்வசப்படுத்தி இருக்கிறது.