பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் 9 முகாம்களை குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா வான்வழி தாக்குதல் – மத்திய அரசு விவரிப்பு….

புதுடெல்லி:
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் 9 முகாம்களை குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா வான்வழி தாக்குதல் நடத்தியது.

நள்ளிரவுக்குப் பின் 1.30 மணியளவில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் குறித்து வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கமளித்தார். ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் பயங்கரவாதத்தின் மீது பதிலடி கொடுக்கும் நமது உரிமையை நிலைநாட்டியுள்ளோம் என்று அவர் எடுத்துரைத்தார்.

ஆபரேஷன் சிந்தூர்: கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இதன் காரணமாக, இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மேகம் சூழ்ந்தது.

அந்தத் தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் வான்வழி தாக்குதலை மேற்கொண்டது இந்திய ராணுவம். பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தாக்குதல் ஏன்? – நள்ளிரவுக்குப் பின் 1.30 மணியளவில் நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கமளித்தார்.

அப்போது அவர், “கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் இந்திய சுற்றுலாப் பயணிகள், நேபாளத்தைச் சேர்ந்த ஒருவர் என 26 பேர் கொல்லப்பட்டனர். அந்தத் தாக்குதல் மிகவும் கொடூரமானது.

பயங்கரவாதிகள் சுற்றுலா வந்தவர்களின் குடும்பத்தினரின் கண் முன்னாலேயே மிகக் கொடூரமான கொலைச் சம்பவத்தை நடத்தினர். இது சுற்றுலாப் பயணிகளின் குடும்பத்தினருக்கு மிகப் பெரிய மன அழுத்தத்தை ஏற்படுத்தியது.

இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானில் பயிற்சி மேற்கொண்ட பயங்கரவாதிகள் ஈடுபட்டதை இந்தியா உறுதி செய்தது. உளவுத் துறை அவர்களின் துல்லியமான புகைப்படங்களையும் வெளியிட்டது.

கடந்த 2008 நவம்பரில் மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பின்னர் உள்நாட்டில் பொதுமக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட மிகப் பெரிய தாக்குதல் பஹல்காம் தாக்குதல். இந்தத் தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பா ஆதரவு பெற்ற ‘ரெசிஸ்டன்ஸ் ஃபோர்ஸ்’ என்ற அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் திரும்பிவரும் இயல்பு நிலையை சிதைக்கவும், வளர்ந்துவரும் சுற்றுலாத் துறையை முடக்கவும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து அங்கு நிலவும் அமைதியைக் குலைக்கவும், மதக் கலவரங்களைத் தூண்டவும் திட்டமிட்டு இந்த பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பல்வேறு பயங்கரவாதக் குழுக்களின் புகலிடமாக இருக்கிறது என்பது உலகம் அறிந்ததே. இந்நிலையில், பல்வேறு தருணங்களில் இந்தியாவும் ஐ.நா. சபையிலேயே பாகிஸ்தான் பயங்கரவாதத்தை தனது நாட்டு எல்லைக்குள்ளேயே ஊக்குவிப்பதை எடுத்துக் கூறி கண்டித்துள்ளது.

இந்தச் சூழலில்தான் பஹல்காம் தாக்குதலும் நடந்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு அடுத்த நாளே பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. பாகிஸ்தான் மீதான நடவடிக்கைகளை அனைவரும் அறிவர்.

ஆனால், அந்த நடவடிக்கைகளுக்கு எதிர்வினை ஆற்றுவதும், குற்றச்சாட்டுகளை மறுப்பதும், பொறுப்பற்ற அறிக்கைகளை விடுவதுமாகவே பாகிஸ்தான் இருந்தது.

இந்தநிலையில்தான் பஹல்காம் தாக்குதல் நடந்த 15 நாட்களுக்குப் பின்னர் திட்டமிட்டு, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை மட்டுமே வெகு நேர்த்தியாகக் குறிவைத்து, பொறுப்புடன் தாக்குதல் நடத்தியுள்ளோம்.

அங்குள்ள 9 முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையின் மூலம் பயங்கரவாதத்தின் மீது பதிலடி கொடுக்கும் நமது உரிமையை நாம் நிலை நாட்டியுள்ளோம். இன்று என்னுடன் இந்தத் தாக்குதல் குறித்து விவரிக்க கர்னல் சோஃபியா குரேஷி, விங் கமாண்டர் வியாமிகா சிங் ஆகியோரும் இணைந்துள்ளனர்” என்றார்.

6 பேர் உயிரிழப்பு: முன்னதாக, இந்தியா – பாகிஸ்தானின் சர்வதேச எல்லைப் பகுதியான எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு (எல்ஓசி) அருகே பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில், இந்தியக் குடிமக்கள் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 7 பேர் இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *