பாகிஸ்தானின் தீவிரவாதத் தாக்குதலுக்கு எதிராக வீரத்துடன் போர் நடத்தி வரும் இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக நாளை சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பேரணி!!

சென்னை:
பாகிஸ்தானின் தீவிரவாதத் தாக்குதலுக்கு எதிராக வீரத்துடன் போர் நடத்தி வரும் இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக நாளை (மே.10) சென்னையில் தனது தலைமையில் பேரணி நடைபெறும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில், “பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கும் தீவிரவாத தாக்குதல்களுக்கும் எதிராக வீரத்துடன் போர் நடத்தி வரும் இந்திய ராணுவத்துக்கு நமது ஒன்றுபட்ட ஒற்றுமையையும் ஆதரவையும் வெளிப்படுத்த வேண்டிய தருணம் இது.

அதனை வெளிப்படுத்தும் வகையில், ஒரு பேரணியை நாளை மாலை 5 மணிக்கு சென்னையிலுள்ள காவல் துறை இயக்குநர் அலுவலகத்திலிருந்து தனது தலைமையில் முன்னாள் படைவீரர்கள், அமைச்சர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பங்குபெறும் பேரணி நடைபெறும்.

இந்த பேரணி தீவுத்திடலில் அருகே உள்ள போர் நினைவுச்சின்னம் அருகில் நிறைவு பெறும்.

இந்த பேரணி, இந்திய ராணுவத்தின் வீரத்தையும் தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் போற்றுவதற்கும், தேச ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கும் நடத்தப்படுகிறது.

தமிழ்நாட்டு மக்கள் இந்தப் பேரணியில் பங்கேற்று, நமது ராணுவத்துக்கு ஆதரவு தெரிவிக்குமாறு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா – பாக். போர் பதற்றம் பின்னணி: கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் 26 பேர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர்.

கொடூரமான இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக புதன்கிழமை நள்ளிரவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்களை அழித்தது இந்திய ராணுவம்.

அதன் தொடர்ச்சியாக, இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே உள்ள எல்லை கிராமங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்தியாவின் 15 நகரங்களை குறிவைத்து வியாழக்கிழமை பாகிஸ்தான் மேற்கொண்ட வான்வழித் தாக்குதல் முயற்சிகளை இந்தியா முறியடித்தது. அதன் தொடர்ச்சியாக இரவிலும் பாகிஸ்தானின் ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் வெற்றிகரமாக வீழ்த்தியது இந்திய பாதுகாப்புப் படை.

எல்லையோர மாநிலங்களில் தொடர்ந்து பதற்றமான சூழலே நிலவுகிறது. ஜம்மு, ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களில் உள்ள எல்லை கிராமங்களில் உச்சக்கட்ட பாதுகாப்பு அமலாகியுள்ளது. இதுபோல், தலைநகர் டெல்லியிலும் பாதுகாப்பும், கண்காணிப்பும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *