நெல்லையப்பர் கோவில் வளாகத்தில் ‘ரீல்ஸ்’ நடனமாடிய சிறுவர்-சிறுமி…..

நெல்லை:
சமீப காலமாக இளைஞர்களும், இளம்பெண்களும் சமூக வலைதளங்களால் தங்களது எதிர்காலத்தை சீரழித்து வருகின்றனர்.

தனது நண்பர்கள் உள்ளிட்டோரிடம் அதிகமான லைக்குகளை பெற வேண்டும் என்பதற்காக சில நேரங்களில் ஆபத்தை உணராமல் வீடியோ எடுக்கச்சென்று உயிரினை இழப்பதும், ஆபாச வீடியோக்களை பதிவு செய்து பொது மக்களின் கண்டனங்களை பெறுவதோடு போலீசாரின் நடவடிக்கைக்கும் உள்ளாகி தங்களது எதிர்காலத்தை இழந்து வரும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்நிலையில் சிறுவர்-சிறுமிகளும் இன்ஸ்டா மற்றும் ஷார்ட்ஸ் வீடியோக்களுக்கு ரீல்ஸ் செய்வதற்கு அதிகளவு ஆர்வம் காட்டி வருகின்றனர். அவர்கள் இடம், பொருள் அறியாமல் அனைத்து இடங்களிலும் ரீல்ஸ் மோகத்தால் ஆடிப்பாடி எதிரில் இருப்பவர்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு விரும்பத்தகாத செயல்களை புரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் காந்திமதி அம்பாள் சன்னதி முன்புள்ள கோவில் வளாகத்தில் சிறுவர்-சிறுமி ஜோடி ஒன்று தக்லைப் படத்தின் புதிய பாடல் ஒன்றுக்கு முகம் சுளிக்கும் வகையில் ஆட்டம் போட்டு அதனை ரீல்ஸ் ஆக இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

ஹயகிரீவன் என்பவரது இன்ஸ்டா பக்கமான விஜே ஹயாஸ் என்ற பக்கத்திலும், அதே போல் சாக்கோ 36 என்ற இன்ஸ்டா பக்கத்திலும் நடிகர்கள் கமல்ஹாசன்-சிம்பு ஆகியோர் ஆடும் அந்த பாடலுக்கு சிறுவர்-சிறுமி 2 பேரும் சேர்ந்து ஆடிய அந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

பாண்டிய நாட்டின் பெருமைமிகு சிவ தலமான நெல்லையப்பர் கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இங்கு சுவாமி நெல்லையப்பர் மற்றும் காந்திமதி அம்பாளுக்கு தனித்தனி ராஜ கோபுரங்களுடன் கூடிய தனித்தனி சன்னதிகள் அமையப் பெற்றுள்ளது.

கோவிலில் 20-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணி செய்து வருவதுடன் 100-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. கேமராக்கள் கொண்டு கண்காணிக்க கூடிய பணி நடந்து வருகிறது.


அப்படியிருக்க, சிறுவர்-சிறுமி இருவரும் ரீல்ஸ் நடனமாடியது பக்தர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

ஏற்கனவே திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், கபாலீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்ஸ்டா மோகத்தில் ரீல்ஸ் வெளியிட்ட சம்பவம் பெரும் பேசு பொருளாக மாறி உள்ள நிலையில் தற்போது நெல்லையப்பர் கோவிலிலும் அந்த சம்பவம் நடந்திருப்பது பக்தர்களிடத்தில் மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறையும், காவல்துறையும் இது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுபவர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே வருங்காலத்தில் இது போன்ற செயல்கள் நடக்காது என சிவனடியார்கள் கூறுகின்றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *