பாமக தலைவர் ராமதாஸுடன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை நேரில் சந்தித்து பேசினார்.
பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையே அண்மைக்காலமாக நிலவி வரும் மோதல்போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவே தோன்றுகிறது. கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினர் பலக்கட்ட சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை.
இதற்கிடையில், என் மூச்சு உள்ள வரை நான் தான் பாமகவின் தலைவர் , நிறுவனர் என்று கூறிய ராமதாஸ், அன்புமனி செயல் தலைவர் மட்டுமே என்று திட்டவட்டமாக கூறி வருகிறார்.
அத்துடன் தமிழகம் முழுவதும் பாமகவில் உள்ள அன்புமணியின் ஆதரவாளர்களை நீக்கிவிட்டு புதிய நிர்வாகிகளை அடுத்தடுத்த நியமனம் செய்து வருகிறார். அதேநேரம், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு அதே பொறுப்பில் நியமனம் செய்து அன்புமணி கடிதம் வழங்கி வருகிறார்.
அடுத்தடுத்து நிர்வாகிகள் நீக்கம் மற்றும் நியமனம் காரணமாக பாமகவில் அசாதாரண சூழல் நிலவுகிறது. தந்தை , மகனுக்கு இடையாயன மோதலில் கட்சியின் பெரும் புள்ளிகள் யார் பக்கம் சாய்வது என தெரியாமல் திணறி வருகின்றனர்.
இந்தநிலையில் திண்டிவனம் தைலாபுரத்தில் உள்ள இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இன்று நேரில் சந்தித்தார். முன்னதாக பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி , மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது செல்வப் பெருந்தொகை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
அப்போது பாமக நிறுவனர் ராமதாஸும் உடனிருந்தார். இந்த நிலையில் இன்று தைலாபுரம் தோட்டத்திற்கு சென்ற செல்வப்பெருந்தகை ராமதாஸை சந்தித்து அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது மாநிலத் துணைத்தலைவர் விஜயனும் உடனிருந்தார். இரு பெரும் தலைவர்களின் சந்திப்பு 2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணியில் மாற்றத்தை ஏற்படுத்துமா என அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.