அதிமுகவை விழுங்குவதுதான் பாஜகவின் உடனடித் திட்டம் – திருமாவளவன்!

சென்னை;
சென்னையில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த திருமாவளவன் கூறியதாவது:-அதிமுக என்கிற ஒரு திராவிட இயக்கத்தில் வளர்ந்தவர்தான் நயினார் நாகேந்திரன். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய தலைவர்கள் தலைமை தாங்கிய திராவிட இயக்கம், பெரியார் இயக்கம் அதிமுக. அந்த இயக்கத்திலேயே வளர்ந்தவர் இன்றைக்கு பாஜக தலைவராக இருக்கிறார்.

இதெல்லாம் தெரிந்துதான் அவரை தலைவர் ஆக்கி இருக்கிறார்கள் பிஜேபி காரர்கள். அதிமுகவை விழுங்குவதுதான் பாஜகவின் உடனடித் திட்டம். இதை அதிமுக காரர்கள் எப்போது புரிந்து கொள்ளப் போகிறார்கள்?

நாங்க ரெண்டு சீட்டா குறையுறோம், ஒரு சீட்டா குறையுறோம்.. அது பிரச்சனை இல்லை. ஏன்னா நாங்கள் ஆண்ட கட்சி இல்லை. ஆண்ட கட்சி இன்றைக்கு 65 எம்எல்ஏக்களை கொண்டு இருக்கிற கட்சி.

அது தேய்மானம் அடைவதற்கு அதிமுக உடன்படுகிறதா? பாஜக அப்படி ஒரு செயல் திட்டத்தோடு இயங்குகிறதா? இல்லையா? முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார் அண்ணா என்கிற இருபெரும் தலைவர்களை கொச்சைப்படுத்தி வீடியோ வெளியிட்டு இருக்கிறார்கள்.

அதை நீங்கள் உடன்பாடு இல்லை என்று சொல்லுவது உடன்பாடான கருத்தாக தெரியவில்லை. அப்படிப்பட்டவர்களுடன் எப்படி இவர்கள் பயணிக்க முடியும்? எப்படி பயணிக்க துணிகிறார்கள்? பெரியாரையும் அண்ணாவையும் கொச்சைப்படுத்தக்கூடிய பாஜக சங் பரிவார் அமைப்புகளோடு அதிமுக பயணிப்பது என்பது தற்கொலைக்கு சமமானது.

வலதுசாரி அரசியலுக்கு துணை போகும் வகையில் செயல்படும் போது பாஜகவின் பி டீம் என்று விமர்சனங்கள் வரும். பாஜகவின் செயல் திட்டங்கள் என்ன.. திராவிட கட்சிகளை ஒழிப்பது, கழகங்கள் இல்லா தமிழ்நாட்டை உருவாக்குவது ஆகியவைதான். கமல்ஹாசன் தொடக்கத்தில் பேசும் அரசியலுக்கும், தற்போது பேசும் அரசியலுக்கும் வித்தியாசம் உள்ளது.

அவர் சமூகநீதி அரசியலுக்கு ஆபத்து என்பதை உணர்ந்திருக்கலாம். அதனால் முரண்பாடு இருந்தாலும் கூட முரண்பாடான கட்சிகளுடன் பயணிக்கலாம் என்று முடிவு எடுத்திருக்கலாம். பாஜக எதிர்ப்பு முக்கியமானது. நடுநிலை சரி வராது என்பதை உணர்ந்து மாற்றம் வந்திருக்கலாம் என்று கூறினார்.

தொடர்ந்து பெரியார் விவகாரத்தில் தவெக தலைவர் விஜய் அமைதி காப்பது தொடர்பான கேள்விக்கு, இந்த நேரத்தில் விஜய் பேசியிருக்க வேண்டும். பெரியாரை விமர்சனம் செய்த பிறகும் அமைதியாக இருப்பது, அவர் உண்மையாகவே பெரியாரை உள்வாங்கி இருக்கிறாரா, ஏற்றுக் கொண்டாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது என்றும் கூறி இருக்கிறார்.’

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *