சென்னை:
பெண்களின் முன்னேற்றத்திற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பெண்கள் சொந்தமாக முன்னேற நிதி உதவி திட்டங்களை வழங்கி வருகிறது.
தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் கடந்த 2023 செப்டம்பர் முதல் 1 கோடியே 6 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பெண்களுக்கு மாதம் ரூ.1,000 நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இதே போல பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் திட்டமானது புதுச்சேரியிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
புதுச்சேரி அரசு பெண்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை 2024-ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தியது.
இந்தநிலையில், புதுச்சேரி தவளக்குப்பம் பகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச மனை பட்டா வழங்கும் விழாவில் முதல்வர் ரங்கசாமி பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1,000 ரூபாய் உதவித்தொகை விரைவில் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் தற்போது வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மட்டும் மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
2026ஆம் ஆண்டு புதுச்சேரி, தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் தான் முதல்வர் ரங்கசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்