புதுடெல்லி,
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து, பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே, இதற்கு முந்தைய நாடாளுமன்ற தேர்தல் மற்றும் மராட்டிய மாநில தேர்தல்களில் முறைகேடுகள் நடந்ததாக, அதாவது வாக்குகள் திருடப்பட்டதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி புகார் கூறினார்.
இதனை ‘வாக்குத்திருட்டு’ என ‘இந்தியா’ கூட்டணி கட்சியினர் குறிப்பிட்டு இந்த பிரச்சினைகளுக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என குரல் கொடுத்து வருகிறார்கள்.
இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்து வருகிறது. இதனால் நாடளுமன்றத்தில் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே நாடாளுமன்றத்தில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், அரசியலமைப்பு திருத்த மசோதா உட்பட 3 முக்கிய மசோதாக்களை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று மக்களவையில் தாக்கல் செய்கிறார். ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குப்படுத்தும் மசோதா, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா, கடுமையான கிரிமினல் குற்றசாட்டுகளால் பிரதமர், முதல்-அமைச்சர்கள், அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் சிறையில் இருந்தால் அவர்களை பதவி நீக்கம் செய்ய புதிய சட்டம் கொண்டு வருவதற்கான முக்கிய மசோதாக்கள் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளன.
எதிர்க்கட்சி முதல்-அமைச்சர்கள், அமைச்சர்கள் ஆகியோர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வரவுள்ளது.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.