“ஆளுமைமிக்க மூப்பனார் பிரதமர் ஆவதை தடுத்ததை, தமிழகத்துக்கு நடந்த துரோகம் என்று கருதுகிறேன்” – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்!!

சென்னை:
“ஆளுமைமிக்க மூப்பனார் பிரதமர் ஆவதை தடுத்ததை, தமிழகத்துக்கு நடந்த துரோகம் என்று கருதுகிறேன்” என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் நிறுவனர் மூப்பனாரின் 24-வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நிர்மலா சீதாராமன், பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

பின்னர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: எளிமையும், நேர்மையும், தேசியமும் கலந்த ஒரு தேசிய கட்சியின் தலைவராக இருந்தவர் மூப்பனார்.

அவருக்கு நாடு தழுவிய அளவில் மதிப்பும், மரியாதையும் இருந்தது. ஆளுமைமிக்க மூப்பனார் தமிழகத்துக்கே பெருமை சேர்க்கும் வகையில், பிரதமராக வேண்டிய சந்தர்ப்பம் உருவானது. ஆனால், அவர் பிரதமராக வேண்டிய தருணத்தை அவர்கள் தடுத்தனர். அந்த சக்தி யார் என்று நமக்கு தெரியும்.

தமிழ், தமிழ் கலாச்சாரம், தமிழின் புகழ் என்று திரும்பத் திரும்ப பேசுபவர்கள் தமிழர் பிரதமர் ஆக வேண்டிய அந்த தருணத்தில் ஆதரவு தராமல் தடுத்தனர். இதையும் நாம் மனதில் வைத்து கொள்ள வேண்டும்.

இதனை மறக்கவும் முடியாது. ஆளுமைமிக்க மூப்பனார் பிரதமர் ஆவதை தடுத்ததை, தமிழகத்துக்கு நடந்த துரோகம் என்று கருதுகிறேன். அரசியல் இங்கே பேசக் கூடாது. மன்னித்து விடுங்கள். இங்கு புகழஞ்சலி செலுத்த வந்து இருக்கிறோம்.

தமிழகத்தில் மூப்பனாரின் கொள்கைகளுக்கு ஏற்றவாறு நல்லாட்சி அமைய நாம் அனைவரும் முயற்சிக்க வேண்டிய தருணம் இது. 2026 தேர்தலில் தமிழகத்தில் ஒரு பெரும் மாறுதலை கொண்டு வர வேண்டிய தேவை நமக்கு உள்ளது.

தமிழக மக்கள் நல்லாட்சி வேண்டும் என கேட்கிறார்கள். ஒரு குடும்பம் பிழைத்துக் கொண்டிருக்கிறது. இதனால் தமிழ் மக்களுக்கு ஒரு ஆதரவும் இல்லை.

மக்கள் அனைவருக்கும் தொண்டு ஆற்றுவது நமது கடமை. அதனால் உங்கள் அனைவருக்கும் சிரம் தாழ்த்தி கைகூப்பி கேட்டுக் கொள்கிறேன். இந்த கூட்டணியை நல்லபடியாக நடத்த வேண்டும்.

இந்த கூட்டணியின் மூலமாக மக்களுக்கு செய்ய வேண்டிய தொண்டை ஆற்ற வேண்டும். சிறிய, சிறிய உட்பூசலை பற்றி நாம் கவலை கொள்ள தேவையில்லை.

முதிர்ச்சியடைந்த பக்குவமாக இருக்கக்கூடிய தலைவர்கள் இங்கு இருக்கின்றனர். எல்லோரும் சேர்ந்து மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *