பாஜகவின் மலிவான சர்வாதிகார அரசியலுக்கு துணை போய் துரோகம் செய்பவர்களை புறக்கணிக்க வேண்டும் – முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!!

சென்னை:
பாஜகவின் மலிவான சர்வாதிகார அரசியலுக்கு துணை போய் துரோகம் செய்பவர்களை புறக்கணிக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் நபிகள் நாயகத்தின் 1500-வது பிறந்தநாள் விழா நேற்று நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முதல்வருக்கு வெள்ளி செங்கோலை நினைவுப் பரிசாக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:

ஒற்றுமையே கொள்கையில் வெற்றி பெறுவதற்கான முதல்படி. காஸாவில் நடந்து வரும் துயரத்தை பார்த்து மனசாட்சியுள்ள யாரும் கவலைப்படாமல் இருக்க முடியாது.

இதற்கு விரைவில் நல்ல தீர்வு ஏற்பட வேண்டும். இதற்கு இந்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மீண்டும் வலியுறுத்துகிறேன்.

நபிகள் நாயகம் குறித்து ஏற்கெனவே பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுவிட்டது. முஸ்லீம்களுக்கு இடர் வருமேயானால் துணை நிற்கும் முதல் அரசியல் கட்சி திமுகதான்.

முத்தலாக் தடை சட்டம் அமல்படுத்தும்போது அதிமுக இரட்டை வேடம் போட்டது அனைவருக்கும் தெரியும். திமுக போன்ற கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் நடத்திய சட்டப் போராட்டத்தால் தான் வக்பு திருத்தச் சட்டத்தின் முக்கிய கூறுகளுக்கு தடை பெற்றிருக்கிறோம்.

பாஜகவின் மலிவான சர்வாதிகார, எதேச்சதிகார அரசியலுக்கு துணை போய் துரோகம் செய்பவர்களை புறக்கணிக்க வேண்டும்.

முஸ்லீம் மக்களின் உரிமையை பாதுகாத்து, உரிமையை பெற்றுத் தரும் இயக்கமாக அவர்களில் ஒருவராக திமுக எப்போதும் இருக்கும். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்வில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் கே.நவாஸ் கனி எம்.பி., தமிழக அரசு தலைமை காஜி (பொறுப்பு) மவுலவி முகமது அக்பர், ஐயுஎம்எல் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், மமக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, திமுக இலக்கிய அணித் தலைவர் அ.அன்வர் ராஜா, மஜக தலைவர் தமிமுன் அன்சாரி, எஸ்டிபிஐ தலைவர் நெல்லை முபாரக், ஆற்காடு இளவரசர் முகமது அப்துல் அலி, சமுதாய ஒருங்ணைப்பாளர் அப்பல்லோ ஹனிஃபா, தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா சபை தலைவர் பி.ஏ.காஜா முயீனுத்தீன் பாகவி பங்கேற்றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *