தவெக நாமக்கல் மாவட்ட செயலருக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்த ஐகோர்ட்!!

சென்னை:
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் நாமக்கல் மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் முன்ஜாமீன் கோரி மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாமக்கல்லில் தவெக தலைவர் விஜய் செப்டம்பர் 27-ம் தேதி பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, தனியார் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியதாக, மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் மீது நாமக்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் காவல் துறையினர் தன்னை கைது செய்யக் கூடும் எனக் கூறி, முன்ஜாமீன் கேட்டு சதீஷ்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், ‘நான் எந்த குற்றமும் செய்யவில்லை. அரசியல் காரணங்களுக்காக வழக்கில் என்னை சேர்த்துள்ளனர். சம்பவ இடத்தில் இருந்த ஒரே காரணத்துக்காக எனக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

போலீசார் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குகிறேன். நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க தயாராக இருப்பதால் முன்ஜாமீன் வழங்க வேண்டும்’ என்று கோரினார்.

இந்த மனு, நீதிபதி என்.செந்தில்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, அப்போது, காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சந்தோஷ், ‘அனைத்து விதிகளையும் பூர்த்தி செய்வதாக கூறி மனுதாரர் அனுமதி பெற்றார்.

அவரது கட்சியினரின் செயல்பாடுகளால் 5 லட்சம் ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

இது தவிர பொது சொத்துகள் சேதப்படுத்தியதாக மேலும் எட்டு வழக்குகள் அவருக்கு எதிராக பதியப்பட்டுள்ளது’ எனக் கூறி, சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்பட ஆதாரங்களை தாக்கல் செய்தார்.

அவற்றை ஆய்வு செய்த நீதிபதி, ‘கட்சியினர் அடாவடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நிலையில், எதுவும் தெரியாது என மனுதாரர் எப்படி கூறலாம்?

கட்சியினரை கட்டுப்படுத்த தெரியாதா? பொறுப்புடன் செயல்பட வேண்டாமா?’ என சரமாரியாக கேள்வி எழுப்பி, முன்ஜாமீன் கோரும் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *