தஞ்சை:
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று பாமகவின் பசுமை தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
திருவிடைமருதூர் வட்டம் அம்மன்குடி அருகே மழையால் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய சவுமியா அன்புமணி கூறியதாவது:
மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடும் போது மனசெல்லாம் வலிக்கிறது. பல மாவட்டங்களில் அறுவடை செய்யப்படாமல் உள்ள குருவை மற்றும் நடவு செய்துள்ள சம்பா நெற்பயிர்கள் அனைத்தும் முழ்கி விட்டன. இது போன்ற நிலை காலங்காலமாக நடைபெற்று வருகிறது.
அனைத்து இடங்களிலும் வடிகால் வாய்க்கால்களை தூர் வாரவில்லை. ஆனால் அரசு தூர் வாரியது போல் கணக்கு காட்டி கல் நட்டுள்ளார்கள்.
அரசு முறையாக தூர்வாரி இருந்தால் இந்த கதி ஏற்பட்டிருக்காது. அறுவடை செய்த நெல்லை சேமிக்க போதிய இடமில்லை. கிடங்குகளில் வைத்துள்ள நெல் மூட்டைகளை பாதுகாக்காததால் மழை நீரில் நனைந்து முளைத்துள்ளன.
நெல்லை பாதுகாப்பாக வைக்க, கொள்முதல் நிலையத்திற்கு தார்படுதா, சாக்கு, சணல் போன்ற உதவிகளை செய்யாத தமிழக அரசு, டாஸ்மாக்கிற்கு, சிசிடிவி கேமரா, போலீஸ் உள்ள வசதிகளை ஏற்படுத்தி பாதுகாப்பு தந்துள்ளது. ஆனால் உண்ணும் உணவுக்கு பாதுகாப்பு வழங்கவில்லை.
மேலும், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய காப்பீட்டுத் தொகையயும் முழுமையாக வழங்கவில்லை. கடந்தாண்டு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.72 லட்சம் இன்னும் வழங்கப்படவில்லை.
எனவே, காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். வாய்க்கால்களை தூர் வார வேண்டும்.
இந்த நிலை மீண்டும் ஏற்படாமலிருக்க தமிழக அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும். இவ்வாறு சவுமியா அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.