கோவை,
சென்னை சேப்பாக்கம் மைதானம் போல் கோவையிலும் உலக தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என கடந்த மக்களவை தேர்தல் வாக்குறுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இதற்காக நான்கு இடங்கள் முதல் தேர்வு செய்யப்பட்டதில் ஒண்டிப்புதூர் திறந்தவெளி சிறைச்சாலை இயங்கி வரும் இடத்தில் 20.72 ஏக்கரில் நிலம் தேர்வு செய்யப்பட்டது.
இதனையடுத்து கிரிக்கெட் மைதானத்திற்கான விரிவான திட்ட மதிப்பீடு தயார் செய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தது.
தொடர்ந்து கோவையில் புதிய சர்வதேச கிரிக்கெட் மைதான கட்டுமானப் பணிகளுக்கு, இந்திய விமான நிலைய ஆணையம் தடையில்லா சான்று வழங்கி உள்ளது.
இந்த நிலையில், கோவையில் அமைக்கப்பட உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் திட்டப் பணிகளை மேற்கொள்ள டெண்டர் கோரியது தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம். பொதுமக்கள் தனியார் பங்களிப்பு முறையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 20.72 ஏக்கரில் மைதானமும், 10 ஏக்கரில் வணிக வளாகமும் அமைக்கப்பட உள்ளது.
கிரிக்கெட் மைதானத்தில் உணவகம், ஸ்போர்ட்ஸ் பார், உயர் தர இருக்கை வசதி, உட்புற பயிற்சி அரங்கம், பீல்டிங் மண்டலம், வீரர்கள் ஓய்வறை, விரிவுரை அரங்குகள், கிளப்ஹவுஸ், விஐபி அறைகள், ஸ்பாஸ், கார்ப்பரேட் அறைகள், பொழுதுபோக்கு வசதிகள் போன்றவை இடம்பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.