தஞ்சாவூர்:
தஞ்சாவூரில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040-வது சதய விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி நடைபெற்ற பரத நாட்டியம் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040-வது சதய விழா தஞ்சாவூரில் நேற்று தொடங்கியது.
இதையொட்டி, நேற்று காலை அரண்மனை வளாகத்தில் இருந்து புறப்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்களின் ஊர்வலத்தை எம்.பி. முரசொலி, எம்எல்ஏ துரை.சந்திரசேகரன், மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இதில் ஏராளமான நாட்டுப்புறக் கலைஞர்கள் பங்கேற்று, கலை நிகழ்ச்சிகளை நடத்தியபடி ஊர்வலமாக பெரிய கோயில் வரை வந்தனர்.
தொடர்ந்து, பெரிய கோயில் வளாகத்தில் 400 கலைஞர்கள் பங்கேற்ற பரத நாட்டிய புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர், மேடை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார். சதய விழாக் குழுத் தலைவர் து.செல்வம் வரவேற்றார். முன்னாள் எம்எல்ஏ எம்.ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சந்நிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அருளுரை வழங்கினார்.
விழாவில், மாவட்ட எஸ்.பி.ராஜாராம், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, அறநிலையத் துறை இணை ஆணையர் ஜோதிலட்சுமி, முன்னாள் நகர்மன்றத் தலைவர் சி.இறைவன், மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநர் ராஜாராம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர், கருத்தரங்கம், கவியரங்கம், 1,040 பேர் பங்கேற்ற பரதநாட்டியம், வில்லுப்பாட்டு, வரலாற்று நாடகம் ஆகியவை நடைபெற்றன. 2-வது நாளான இன்று (நவ. 1) காலை மங்கல இசையுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது.
தொடர்ந்து, கோயில் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி, ராஜராஜ சோழன் சிலைக்கு அரசு மற்றும் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி, ராஜவீதிகளில் திருமுறை பண்ணுடன் 100-க்கும் மேற்பட்ட ஓதுவா மூர்த்திகளின் வீதியுலா நடைபெற உள்ளன. தொடர்ந்து, பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பேரபிஷேகம், பெருந்தீப வழிபாடு நடைபெறும். மாலையில் இன்னிசை நிகழ்ச்சி, தேவார பண்ணிசை, சுவாமி வீதியுலா, விருது வழங்கும் விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.