கரூர்:
கரூர் கூட்ட நெரிசல் துயரச் சம்பவம் தொடர்பாக தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள், ஓட்டுநர்களிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். கரூரில் தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் சுற்றுலா மாளிகையில் தங்கியுள்ள அவர்கள், 300-க்கும் மேற்பட்டோருக்கு சம்மன் அனுப்பி, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, இதுவரை சம்பவம் நடந்த அன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், பல்வேறு துறை அதிகாரிகள், வியாபாரிகள், நேரடி சாட்சிகள் என பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில், சம்பவம் நடந்த அன்று பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் என 6 பேர் நேற்று சுற்றுலா மாளிகையில் சிபிஐ அதிகாரிகள் முன்பு ஆஜராகினர்.
அவர்களிடம், கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பாக தகவல் தெரிவித்தது யார்? எத்தனை மணிக்கு தகவல் வந்தது? பாதிக்கப்பட்டவர்களை வாகனத்தில் ஏற்றும்போது அவர்கள் என்ன நிலையில் இருந்தனர்? என்பன உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரித்தனர்.