திருப்பதி
திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே 2 கிலோ மீட்டர் தொலைவில் அடர்ந்த காடுகள், மலைகளுக்கு இடையே உள்ள பார்வேடு மண்டபத்தில் வருடாந்திர கார்த்திகை வனபோஜன உற்சவம் நடந்தது. அதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் முன்கூட்டியே செய்திருந்தனர்.
நேற்று காலை 8.30 மணிக்கு உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் தங்க கஜ வாகனத்தில் எழுந்தருளினார்.
உபய நாச்சியார்களான ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் இருந்து பார்வேடு மண்டபம் வரை அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எழுந்தருளி மேள, தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் இசைக்க ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டனர்.
ஊர்வலத்தில் ஏராளமான பஜனை குழுவினர் பஜனை பாடல்களை பாடினர். நடன கலைஞர்கள் கோலாட்டம் ஆடினர். பக்தர்கள் கோவிந்தா.. கோவிந்தா.. என பக்தி கோஷம் எழுப்பினர்.
கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு பார்வேடு மண்டபத்தை அடைந்ததும் அங்கு அர்ச்சகர்கள் காலை 11 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமிக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், நெய், இளநீர், பஞ்சாமிர்தம் போன்றவற்றால் ஸ்நாபன திருமஞ்சனம் செய்தனர். தொடர்ந்து சமர்ப்பணம் மற்றும் நைவேத்தியம் செய்தனர்.
அதைத்தொடர்ந்து பார்வேடு மண்டப வளாகத்தில் பசுமையான நெல்லி மரங்களின் கீழே அனைத்து பக்தர்களுக்கும் அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது. அதில் ஜீயர் சுவாமிகள், கோவில் அதிகாரிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.