பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள்….. 201 இடங்களில் பா.ஜ.க. கூட்டணி முன்னிலை !! இந்தியா கூட்டணி படுதோல்வி!!

பாட்னா,

பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 201 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதன் மூலம் மீண்டும் ஆட்சியை தக்க வைக்கிறது பா.ஜ.க. கூட்டணி. இந்தியா கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது.

பீகாரில் 243 சட்டசபை தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

தே.ஜ. கூட்டணி 201 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. ஆர்ஜேடி தலைமையிலான மஹாகட்பந்தன் (இந்தியா) கூட்டணி 36 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

பீகாரில் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடக்கிறது.

இங்கு மொத்தமுள்ள 243 சட்டசபை தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடந்தது. கடந்த 6–ந்தேதி 121 தொகுதிகளில் நடந்த முதற்கட்ட தேர்தலில், 65 சதவீத வாக்குகள் பதிவாகின. மீதமுள்ள 122 தொகுதிகளில் 11ம் தேதி நடந்த இரண்டாம் கட்ட தேர்தலில் 67.14 சதவீத வாக்குகள் பதிவாகின.

வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், ‘விவிபாட்’ எனப்படும் ஒப்புகை சீட்டு எந்திரங்களும் ‘சீல்’ வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு நிறைந்த பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு அறைகளுக்கு இரட்டை பூட்டுப்போடப்பட்டது.

இந்த நிலையில் இரண்டு கட்டங்களாக நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு 46 வாக்கு எண்ணிக்கை மையங்களில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.

அதனை தொடர்ந்து மற்ற வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஆரம்பத்தில் இருந்தே தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. இந்தியா கூட்டணி கடும் பின்னடைவை சந்தித்து வருகிறது.

தற்போது பீகார் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் மிகப்பெரிய வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. பெரும்பான்மைக்கு 122 இடங்களே தேவைப்படும் நிலையில், தற்போது 201 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. முதலமைச்சர் நிதிஷ் குமாரின் ஆதரவாளர்கள் பாட்னாவில் உள்ள ஜே.டி.யு. அலுவலகத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

வாக்கு எண்ணிக்கையில் பா.ஜ.க. தனிப்பெரும் கட்சியாக முன்னிலை வகித்து வருகிறது. போட்டியிட்ட 101 தொகுதிகளில் 90 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளான ஜே.டி.யு. 81 தொகுதிகளிலும், மற்றவர்கள் 29 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர்.

இந்தியா கூட்டணியில் ஆர்ேஜடி 29 தொகுதிகளிலும், காங்கிரஸ் 4 தொகுதிகளிலும் மற்றவர்கள் 5 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர்.

இதர கட்சிகள் 6 இடங்களில் முன்னிலை. ஜன்சுராஜ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்க வில்லை.

அலிநகரில் பாஜகவின் மைதிலி தாக்கூர் தொடர்ந்து 8 ஆயிரத்து 500 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.

ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சித் தலைவர் லல்லு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் ரகோபூர் தொகுதியில் 6வது சுற்றில் முன்னிலையில் உள்ளார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் சதீஷ் குமார் ஐந்து சுற்று வரை முன்னிலை வகித்தார்.

மஹுவா சட்டசபை தொகுதியில் ஜனசக்தி ஜனதா தளம் கட்சியின் சார்பாக போட்டியிட்ட தேஜ் பிரதாப் யாதவ், (தேஜஸ்வி யாதவ் சகோதரர்) நான்காவது இடத்தில் உள்ளார்.

லக்கிசராய் தொகுதியில் தேஜ கூட்டணி சார்பில் மாநில பாஜக தலைவர் விஜய் குமார் சின்ஹா முன்னிலை வகிக்கிறார். மஹாகட்பந்தன் கூட்டணி சார்பில் அமரேஷ் குமார் (காங்கிரஸ் வேட்பாளர்) பின்னடைவை சந்தித்துள்ளார்.

மஹூவா தொகுதியில் தேஜ கூட்டணி சார்பில் போட்டியிட்ட சஞ்சய் குமார், ஆர்ஜேடி வேட்பாளர் முகேஷ் குமார் ரஷனை பின்னுக்கு தள்ளி முன்னிலை வகிக்கிறார்.

டானாபூர் தொகுதியில் தேஜ கூட்டணி சார்பில் போட்டியிட்ட ராம் கிருபால் யாதவ்வை முந்தி செல்கிறார் ஆர்ஜேடி வேட்பாளர் ரிட் லால் ராய்

மொகாமா தொகுதியில் ஜேடியு தலைவர் அனந்த் குமார் சிங், தாராபூர் தொகுதியில் பீகார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி, ரூபாலி தொகுதியில் ஜேடியு வேட்பாளர் கலாதர் பிரசாத் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் கடந்த 11-ம் தேதி இரவு வெளியாகின. இதில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி 150க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்றி மீண்டும் நிதிக்குமார் ஆட்சி அமைக்கும் என்று சுமார் 19 ஊடகங்கள் கணித்தன. மெகா கூட்டணிக்கு சுமார் 85 இடங்கள் கிடைக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பீகார் சட்டசபை தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கணக்குகளை தேஜ கூட்டணி சுக்குநூறாக்கியுள்ளது. பிரதமர் மோடியின் மீதும், நிதிஷ்குமார் மீதும் மக்கள் வைத்துள்ள உறுதியான நம்பிக்கையை இந்த முடிவுகள் வெளிக்காட்டுவதாக உள்ளன.

இதுவரை 4 முறை ஆட்சிய மைத்துள்ள நிதிஷ் குமார், மீண்டும் 5வது முறையாக முதல்வராகும் வாய்ப்பு உள்ளது. இருந்தாலும் பா.ஜ.க. தனி பெரும்பான்மை பெற்றிருப்பதால் மற்ற கட்சிகளுடன் சேர்ந்த பா.ஜ.க. ஆட்சி அமைக்கலாம்.

2025 சட்டசபை தேர்தலில் தேஜஸ்வி யாதவ் கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், லால் யாதவின் காட்டாட்சி மீண்டும் கட்டவிழ்த்து விடப்படுமோ? என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

எனவே இந்தியா கூட்டணியினரின் பிரச்சாரத்தை தாண்டி மோடிக்கும் நிதிஷ்குமாருக்கும் மக்கள் பெருவாரி யான வாக்குகளை அளித்து மாபெரும் வெற்றி பெறச் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *