திருப்பூர்,
பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட திருப்பூர் மாநகராட்சி வீரபாண்டி பகுதி அண்ணா திமுக சார்பில் வாக்காளர் சிறப்பு திருத்த பணிகள் தொடர்பான கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், எம்.எஸ்.எம்.ஆனந்தன், மாவட்ட பொறுப்பாளர்கள் கே.ஆர்.அர்ஜுணன், விக்னேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள வாக்காளர்கள் சிறப்பு திருத்தம் தொடர்பாக பல்லடம் சட்டமன்ற தொகுதி திருப்பூர் மாநகராட்சி வீரபாண்டி, மேற்கு, கிழக்கு பகுதி சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் (பிஎல்ஏ -2) ஆலோசனை மற்றும் பயிற்சிக்கூட்டம் குப்பாண்டம்பாளையத்தில் உள்ள வாணிப செட்டியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
பகுதி செயலாளர்கள் சுரேந்தர், பண்ணையார் பழனிசாமி உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாவட்ட செயலாளர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கி பேசியதாவது:–
போலி வாக்காளர்கள் அதிக அளவில் சேர்க்கப்பட்டுள்ளதை கண்டறிந்து தேர்தல் கமிஷனே வாக்காளர் சிறப்பு திருத்த பணியை கடந்த 4ந்தேதி முதல் மேற்கொண்டு உள்ளது.
பூத் கமிட்டி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் இதில் சிறப்பு கவனம் செலுத்தி போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டு, உண்மையான வாக்காளர்கள் பதிய பிஎல்ஓ அலுவலர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
அண்ணா திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 200 தொகுதிக்கும் மேல் வெற்றி உறுதி என அனைத்து கருத்து கணிப்புகளும் தெரிவித்து வருகின்றன.
பல்லடம் தொகுதியில் ஒரு லட்சம் வாக்குகள் அதிகமாக பெறும் வகையில் உங்களது பணிகள் இருக்க வேண்டும் என அவர்கள் பேசினார்.
இதில் மாவட்ட பொறுப்பாளரும், நீலகிரி முன்னாள் எம்.பி.யுமான கே.ஆர்.அர்ஜுணன், மண்டல ஐடி விங்க் செயலாளர் விக்னேஷ் ஆகியோர் பூத் கமிட்டி நிர்வாகிகளின் வருகை பதிவினை சரி பார்த்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கி பேசினர்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ., கே.பி.பரமசிவம், மாவட்ட அவைத்தலைவர் எஸ்.சிவாச்சலம், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் மோகன்ராஜ், வழக்கறிஞர் கே.என்.சுப்பிரமணியம், வார்டு நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் பூத் கமிட்டி முகவர்கள் கலந்து கொண்டனர்.