“எங்கள் கூட்டணிக்கு இன்னும் சில கட்சிகள் வரவிருக்கின்றன” என சேலத்தில் இபிஎஸ்ஸை சந்தித்துப் பேசிய பிறகு ஜி.கே.வாசன் பேட்டியளித்த அதேநேரத்தில் மதுரையில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் ‘மரியாதை நிமித்தமாக’ சந்தித்துப் பேசியது பல்வேறு ஊகங்களை விதைத்து விட்டிருக்கிறது.
தேமுதிக வாக்குச் சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்துக்காக கடந்த 17-ம் தேதி மதுரை வந்திருந்தார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். இந்த நிகழ்ச்சியில் தான் பிரேமலதாவை உதயகுமார் திடீரென சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பு முடிந்தவுடன், “அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி சேர வாய்ப்பு இருக்கிறதா… இந்த சந்திப்பு அதற்கான அச்சாரமா?” என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு மழுப்பலாகவே பதிலளித்த பிரேமலதா, ‘‘கூட்டணி சிதம்பர ரகசியமா என்ன? ரகசியம் என்பதே தேமுதிக வரலாற்றில் கிடையாது. தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளுமே எங்களுக்கு தோழமைக் கட்சிகள்தான்.
அவர்கள் எல்லோருமே தேமுதிக-வுடன் கூட்டணி வைக்க ஆர்வமாக உள்ளனர். என்றாலும் மாவட்டச் செயலாளர்களையும், நிர்வாகிகளையும் அழைத்துப் பேசி மக்கள் மனநிலையையும் ஆராய்ந்து நாங்கள் நிச்சயமாக நல்ல முடிவை எடுப்போம்” என்றார்.
அப்போதும் விடாத செய்தியாளர்கள், ‘‘திடீரென ஆர்.பி.உதயகுமார் உங்களை வந்து சந்தித்திருக்கிறாரே..?” என்று கேட்டதற்கு, ‘‘இவங்க கூடதான் கூட்டணி… அவங்ககூட தான் கூட்டணி என்று நாங்கள் இன்னமும் முடிவுக்கு வரவில்லை.
எங்கம்மாவின் மறைவுக்கு அனைத்து தலைவர்களும் வந்து இறுதி மரியாதை செலுத்தினார்கள். பிரதமரும் இரங்கல் தெரிவித்தார். அந்த அடிப்படையில் தான் உதயகுமாரும் இன்று என்னை சந்தித்து துக்கம் விசாரித்தார்” என்றார்.
பிரேலதாவை சந்திக்கும் முன்பாக, தேமுதிக கூட்டம் நடந்த மண்டபத்தின் ஓர் அறையில் சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக உதயகுமார் காத்திருந்தார்.
கட்சிக் கூட்டத்தை முடித்துவிட்டு வந்து அவரை சந்தித்த பிரேமலதா, உதயகுமாரை உட்காரவைத்துக் கூட பேசாமல் நிற்க வைத்தே சுமார் 5 நிமிடங்கள் பேசிவிட்டு அவரை வழியனுப்பி வைத்தார்.
பிரேமலதாவை மரியாதை நிமித்தமாக சந்திக்கும்படி இபிஎஸ் தன்னை அனுப்பி வைத்ததாக உதயகுமாரே செய்தியாளர்கள் சந்திப்பில் வெளிப்படையாகச் சொன்னார்.
இருந்த போதும், இப்போதைக்கு யாருக்கும் பிடிகொடுத்துவிட வேண்டாம் என்ற முன் ஜாக்கிரதையுடன் உதயகுமாரை ‘ஆகட்டும் பார்க்கலாம்’ என்ற ரேஞ்சில் நிற்கவைத்தே பேசி அனுப்பி இருக்கிறார் பிரேமலதா.
இதுகுறித்து நம்மிடம் பேசிய மதுரை அதிமுக நிர்வாகிகள் சிலர், “மரியாதை நிமித்தமாக தன்னைச் சந்திக்க வந்த உதயகுமாரை பிரேமலதா தனியாகச் சந்தித்துப் பேசி இருக்கலாம். அல்லது 2 நாட்கள் மதுரையில் இருந்த அவரை யாருக்கும் தெரியாமலாவது போய் சந்தித்திருக்கலாம் உதயகுமார்.
ஆனால், அதற்கான வாய்ப்பை பிரேமலதா கொடுக்கவில்லை எனத் தெரிகிறது. ஒருவேளை, அதிமுக தங்களது தயவை தேடுகிறது என வெளியில் தெரியவேண்டும் என பிரேமலதா நினைத்தாரோ என்னவோ.
மக்களவைத் தேர்தலில் விருதுநகரில் போட்டியிட்ட விஜய பிரபாகரனுக்காக உதயகுமார் மிகக் கடுமையாக உழைத்தார்.
அதனால் தான் அவரை பேச்சுவார்த்தைக்கு அனுப்பி இருக்கிறார் இபிஎஸ். ஆனால் பிரேமலதா, திமுக சைடிலும் பேசிக்கொண்டு இருப்பார் போலிருக்கிறது. அதனால் தான் உதயகுமாரை பட்டும் படாமல் பேசி அனுப்பி இருக்கிறார்” என்றனர்.
தேமுதிக நிர்வாகிகளோ, ‘‘ஆலோசனைக் கூட்டம் நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் உதயகுமார் வந்துவிட்டார். அதனால், அவரை எங்கள் பொதுச்செயலாளர் கூட்டம் முடிந்து வந்து சந்தித்தார்.
இருவரும் அடுத்தடுத்த நிகழ்ச்சிகளுக்கு போக வேண்டி இருந்ததால் உட்கார்ந்து பேச நேரமில்லாமல் நின்று கொண்டே பேசினர்” என்றார்கள்.