சென்னை:
காவிரி-வைகை குண்டாறு திட்டத்தை விரைந்து நிறைவேற்றக் கோரி விவசாயிகள் சென்னையில் பேரணி நடத்தினர்.
காவிரி-வைகை குண்டாறு திட்டத்துக்கு போதிய நிதி ஒதுக்கி, திட்டத்தை நிறைவேற்றக் கோரி அகில இந்திய விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் சென்னையில் நேற்று பேரணி நடைபெற்றது.
எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் தொடங்கிய பேரணி, தெற்கு கூவம் சாலை வழியாக லாங்க்ஸ் கார்டன் சாலையில் முடிவடைந்தது. இதில் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
பேரணிக்கு விவசாய சங்கத் தலைவர் கோவிந்தராஜு தலைமை வகித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் சங்க செயலாளர் சுருளியாண்டவர் கூறியதாவது:
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு எழுவனம்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள 15 கிராமங்களுக்கு வைகை – சோத்துப்பாறை – மஞ்சளாறு உபரி நீரை கிளை வாய்க்கால்கள் அமைத்து பாசன மற்றும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி 40 ஆண்டுகளாக விவசாயிகள் போராடி வருகின்றனர்.
இந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வுகாண வேண்டும். அதேபோல, மந்தமாக நடந்து வரும் காவிரி-வைகை குண்டாறு திட்டத்துக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்து, அத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
விவசாயப் பொருட்களை அரசே மொத்த கொள்முதல் செய்து, விநியோகம் செய்ய வேண்டும்.
குறைந்தபட்ட ஆதார விலையை சட்டமாக்க வேண்டும். விவசாயிகளை பாதிக்கும் மின் மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும். இந்த கோரிக்கைகள் தொடர்பாக கிராமப் பஞ்சாயத்துகளிலும், வட்டாரத் தலைநகர்களிலும் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் அரசாங்கத்தின் காதுகளுக்கு எட்டாததால், மாநிலத் தலைநகரில் பேரணியை முன்னெடுத்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.