புவனேஷ்வர்:
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு – ஒடிசா அணிகள் இடையிலான ஆட்டம் புவனேஷ்வரில் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 83 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக பிரதோஷ் ரஞ்ஜன் பால் 78, ஆந்த்ரே சித்தார்த் 56, ஆதிஷ் 50 ரன்கள் சேர்த்தனர். நிதிஷ் ராஜகோபால் 54, கேப்டன் சாய் கிஷோர் 12 ரன்களுடன் களத்தில் இருந்தனர். நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய தமிழ்நாடு அணி 86 ஓவர்களில் 286 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
நிதிஷ் ராஜகோபால் 54, சாய் கிஷோர் 12, திரிலோக் நாத் 1 ரன்னில் நடையை கட்டினர். ஒடிசா அணி தரப்பில் ராஜேஷ் மொகன்டி, தேபப்பிரதா ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.
இதையடுத்து விளையாடிய ஒடிசா அணி 51.2 ஓவர்களில் 148 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக அனில் பரிதா 56, சம்பித் பரால் 36 ரன்கள் சேர்த்தனர். தமிழ்நாடு அணி சார்பில் மித வேகப்பந்து வீச்சாளரான சோனு யாதவ் 5 விக்கெட்களை வீழ்த்தினார். திரிலோக் நாத், வித்யுத் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.
138 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய தமிழ்நாடு அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 17 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 26 ரன்கள் எடுத்தது. நாராயணன் ஜெகதீசன் 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ஆதிஷ் 12, வித்யுத் 7 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.