கோவை,
தமிழகத்தின் ஊரக மற்றும் வேளாண் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வரும் நபார்டு வங்கி, கோவை மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற வளம் சார்ந்த தகவல்களின் அடிப்படையில் 2026–27 நிதியாண்டிற்கு ரூ.73,777.79 கோடி அளவிலான கடனாற்றல் இருப்பதாக மதிப்பீடு செய்துள்ளது.
இது நடப்பு ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 12.45 சதவீதம் அதிகரிப்பாகும். இந்த வளம் சார்ந்த கடன் திட்ட ஆவணம், மாவட்டத்தின் ஆண்டு கடன் திட்டம் தயாரிப்பதற்கான அடிப்படையாக அமையும்.
இதனையடுத்து நடைபெற்ற கூட்டத்தில், கோவை கலெக்டர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர், ஆவணத்தை வெளியிட்டார்.
இந்நிகழ்வில் மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளர் சண்முகசிவா, இந்திய ரிசர்வ் வங்கியின் ஏஜிஎம் சி.அன்பரசு, கனரா வங்கியின் டிஜிஎம் ஷைலஜா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பி.பி.ஜிதேந்திரன், நபார்டு மாவட்ட மேம்பாட்டு மேலாளர் சி.திருமல ராவ் உள்ளிட்ட அரசு மற்றும் வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஆவணத்தை வெளியிட்ட கலெக்டர், கல்வித் துறை, எம்எஸ்எம்இ துறை மற்றும் பல்வேறு அரசு திட்டங்களின் கீழ் வழங்கப்படும் கடன்களை வங்கிகள் எளிதாகவும், சிக்கலின்றியும் வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
கோவை மாவட்டத்தின் தொழில் வளர்ச்சித் திறனை முழுமையாக பயன்படுத்தி, தொழில் முனைவோரை அதிகரிப்பதில் வங்கிகள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மேலும், வேளாண் உற்பத்திகளுக்கான மதிப்புக் கூட்டுதல் அலகுகளை ஊக்குவிப்பதில் தொடர்புடைய துறைகளுக்கான கடன்களின் அவசியத்தையும் குறிப்பிட்டார்.
துறை வாரியான முக்கிய விவரங்களை விளக்கிய அவர், எம்எஸ்எம்இ துறைக்கு ரூ.48,148.38 கோடி, வேளாண்மை, இணைத் துறைகள் மற்றும் பிற செயல்பாடுகளுக்காக ரூ.25,630 கோடி என கடனாற்றல் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
இந்த மதிப்பீடுகள் அனைத்தும் இந்திய அரசின் தேசிய முன்னுரிமைகளுக்கு ஏற்ப வகுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பி.பி.ஜிதேந்திரன், பிஎல்பி மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டு பின்புல ஆவணம் மற்றும் பிளாக், செயல்பாடு வாரியான திறன் விவரங்கள் வங்கிகளுக்கு வழங்கப்படும் என்றார்.
இதன் அடிப்படையில் வங்கிகள் கிளை மட்ட கடன் திட்டங்களை தயாரித்து, அதன் பின்னர் பிளாக் கடன் திட்டம் மற்றும் மாவட்ட கடன் திட்டம் (டிசிபி) உருவாக்கப்படும் என அவர் தெரிவித்தார்.