துபாய்:
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இதில் 20 நாடுகள் பங்கேற்கின்றன.
இதற்கிடையே டி20 உலக கோப்பையில் இந்தியாவுடன் விளையாட மாட்டோம் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
அதே நேரத்தில் டி20 உலகக் கோப்பையில் ஆடுவோம் என்றும் தெரிவித்து உள்ளது. இந்தியாவுடனான போட்டியை எதற்காக புறக்கணிக்கிறோம் என்ற காரணத்தை பாகிஸ்தான் அரசு தெரிவிக்கவில்லை.
இதை தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு ஐ.சி.சி. எச்சரிக்கை விடுத்தது. கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் இதனால் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியது.
இந்தியாவுடனான போட்டியை புறக்கணிப்பது தொடர்பாக ஐ.சி.சி.யிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பி.சி.பி) இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. பி.சி.பி.யின் முறையான அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ஐ.சி.சி. இன்னும் காத்திருக்கிறது.
பாகிஸ்தான் அரசின் முடிவுப்படி இந்தியாவுக்கு எதிராக விளையாட இயலாது என்ற முடிவில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
புறக்கணிப்பு முடிவை எடுத்தால் பாகிஸ்தான் பல்வேறு நடவடிக்கைகளை சந்திக்கும். பாகிஸ்தானுக்கு மற்ற நாடுகள் செல்வதற்கு தடை, வருவாய் பகிர்வு நிறுத்தம், பி.எஸ்.எல். போட்டியில் வெளிநாட்டு வீரர்களுக்கு அனுமதி மறுப்பு, அபராதம் என பல்வேறு வகையில் நடவடிக்கைகளை ஐ.சி.சி. எடுக்கும்.
இந்தியாவுடனான போட்டியில் விளையாட பாகிஸ்தான் மறுத்தால் இந்திய அணிக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்.
திட்டமிடப்பட்ட நாளில் (15-ந்தேதி) இந்திய அணி கொழும்பு மைதானத்துக்கு சென்று விடும்.
டாஸ் போடும் நிகழ்வில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பங்கேற்பார். பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா வரவில்லை என்றால் அந்த அணி வெளியேறியதாக தகுதி நடுவர்கள் இந்தியாவுக்கு 2 புள்ளிகளை வழங்குவார்கள்.
பாகிஸ்தான் அணி நாக் அவுட் சுற்றிலும் இந்தியாவுடனான போட்டியை புறக்கணிக்கும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் அணி இலங்கை புறப்பட்டு சென்றது.