சென்னை:
நடிகை டாப்ஸி, தனது திரையுலக வாழ்க்கையை தமிழ், தெலுங்கு படங்களில் இருந்து ஆரம்பித்தார்.
பின்னர் இந்திக்குச் சென்ற அவர், சிறந்த கதைகளில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். அவர் நடித்து பிப்.20-ம் தேதி வெளியான ‘அஸ்ஸி’ படம், வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெலுங்கு சினிமாவை விமர்சித்திருந்தார்.
“தென்னிந்திய சினிமா கவர்ச்சியை காட்சிப் படுத்துவதில் அதிகம் கவனம் செலுத்துகிறது. நடிகைகளின் உடலை ஆபாசமாகக் காட்டுகின்றன” என்று கூறியிருந்தார்.
அவர் கருத்தை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கடுமையாக ட்ரோல் செய்தனர். தென்னிந்திய படங்களில் நடிக்கத் தொடங்கி, வளர்ந்தபிறகு அதே சினிமாத் துறையை இழிவாகப் பேசுவதை வழக்கமாக வைத்துள்ளனர் என டாப்ஸி கருத்துக்கு விமர்சனங்கள் எழுந்தன.
இதையடுத்து இப்போது அளித்துள்ள பேட்டியில், அப்படியே மாற்றி பேசியுள்ளார் டாப்ஸி.
அதில், “தெலுங்கு சினிமாவில், நடிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வேடங்கள் உள்ளன. தமிழ் சினிமாவில் இது அரிதாகவே கிடைக்கும்.
டோலிவுட்டில் எனக்கு நல்ல வேடங்கள் கிடைத்துள்ளன. தெலுங்கு ரசிகர்கள் என்னைத் தொடர்ந்து ஆதரிக்கிறார்கள்.
எனது மதிப்பை உயர்த்திய படங்கள் தெலுங்கில் உருவானவைதான்” என்று கூறியுள்ளார். இதையும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.