திண்டுக்கல்:
”10 தோல்வி அடைந்த பழனிசாமி, சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுக்கு பின்னர் ‘படுதோல்வி’ பழனிசாமி ஆகிவிடுவார்”, என திண்டுக்கல்லில் நடந்த இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
திண்டுக்கல்லில், திண்டுக்கல், தேனி மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் இ.பெ.செந்தில்குமார் வரவேற்றார்.
தேனி மாவட்ட செயலாளர்கள் கம்பம் ராமகிருஷ்ணன், தங்கதமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: கட்சி தலைமையின் உத்தரவுகள் அனைத்தையும் திறம்பட செயல்படுத்தும் மாவட்டங்களாக திண்டுக்கல், தேனி மாவட்ட நிர்வாகிகள் உள்ளனர். தேர்தலுக்கு இன்னும் 29 நாட்கள் உள்ளது.
கடந்த மக்களவை தேர்தலில் இளைஞரணியினரின் உழைப்பால் தான் 100-க்கு 100 சதவீதம் வெற்றியை பெற முடிந்தது.
இந்தியாவில் பல கட்சிகள் பூத் கமிட்டி ஆள் இல்லாமல் திணறிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் தமிழகத்தில் ஒவ்வொரு பூத்-களிலும் இளைஞரணி நிர்வாகிகள் உள்ளனர்.
இளைஞர்களை பயன்படுத்தி நாம் வெற்றியைப் பெற வேண்டும். திமுகவில் எத்தனையோ அணிகள் இருந்தாலும் இதில் இளைஞரணி தான் முதன்மையானது என முன்னாள் முதல்வர் கருணாநிதியே சொல்லியுள்ளார்.
அவர் சொல்லியதை நிகழ்த்திக்காட்டும் நேரம் வந்துள்ளது. 2021 தேர்தல் வாக்குறுதிகளில், எதையெல்லாம் செய்துள்ளோம் என மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும். சில சொல்லாத வாக்குறுதிகளையும் நாம் செய்துள்ளோம்.
மகளிர் விடியல் திட்டத்தை நம்மைப் பார்த்து பல மாநிலங்களில் செயல்படுத்தியுள்ளனர்.
குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை தமிழக முதல்வர் திட்டங்களைப் பார்த்துப் பார்த்து செய்வதால் தான் தமிழகம் இந்தியாவில் முதன்மை மாநிலமாக மாறியுள்ளது.
அரசு செய்த திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அடிமைகளை உடன் வைத்துக்கொண்டு எப்படியாவது தமிழகத்தில் நுழைந்துவிடலாம் என பாஜக நினைக்கிறது.
தமிழ்நாட்டில் கருப்பு சிவப்பு வேட்டி கட்டிய கடைசி தொண்டன் இருக்கும்வரை பாஜக தமிழகத்தில் நுழைய முடியாது. நீங்கள் சூழ்ச்சி செய்து, வித்தைகள் காட்டி வடநாட்டில் வேண்டுமானால் வெற்றி பெறலாம். தமிழ்நாட்டில் அது நடக்காது.
நடைபெறவுள்ள தேர்தல் டெல்லி அணிக்கும் தமிழகத்துக்குமான தேர்தல். இதில் தமிழக அணி நிச்சயம் வெற்றி பெறும். கட்சியினுடைய தலைவர்கள் வேறு கட்சி அலுவலகத்திற்கு சென்றால் அது தலைப்புச் செய்தியாக வெளிவரும்.
ஆனால் கடந்த இரண்டு தினங்களாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, அதிமுக அலுவலகத்திற்கு சென்றார் என்பதே செய்தியாக வருகிறது. அவர் இதுவரை டெல்லியில் உள்ள அமித் ஷா அலுவலகத்திற்கு சென்று வந்தார். அவரது அலுவலகம் சென்னையில் உள்ளதையே மறந்துவிட்டார். இதுதான் இன்றைய அதிமுகவின் நிலைமை.
தேர்தலுக்கு பிறகு பத்து தோல்வி பழனிசாமியை மக்கள் இனி ‘படுதோல்வி’ பழனிச்சாமியாக்கிவிடுவர். அதிமுக கூட்டணிக்கு வாரண்டியும் கிடையாது, கேரண்டியும் கிடையாது.
பிஹாரில் வெற்றி பெற்ற நிதிஷ் குமாரை ஓங்கட்டிவிட்டு பாஜக குறுக்கு வழியில் ஆட்சியை பிடித்துவிட்டது. பத்து முறை முதல்வர் ஆன நிதிஷ் குமாருக்கே இந்த நிலை என்றால் ‘பாதம் தாங்கி’ பழனிசாமியின் நிலையை நினைத்து பாருங்கள்.
மக்களால் அங்கீகரிக்கப்பட்ட கூட்டணி திமுக கூட்டணி. பாஜக மட்டுமல்ல அதன் ”பி- டீம்”, ”சி- டீம்” என எத்தனை டீம் வந்தாலும் வெற்றிபெறப்போவது திமுக அணி தான்.
ஒவ்வொரு வாக்காளரையும் இரண்டு முறை இளைஞரணி நிர்வாகிகள் சந்திக்க வேண்டும். முதலில் உங்கள் வீட்டில் உள்ளவர்களிடம் ஓட்டு கேளுங்கள். அதன் பிறகு உறவினர்கள், நண்பர்கள் அவர்களின் குடும்பத்தினர். உங்கள் குடும்ப வாக்குகள் அனைத்தும் திமுகவிற்கு வருவதை உறுதிப்படுத்துங்கள். எல்லோரையும் சரிகட்டுவது சற்று சிரமம்.
ஆனால் அனைத்து முயற்சிகளையும் செய்யுங்கள்.தேர்தலுக்கு இன்னும் 29 நாட்கள் உள்ளது. இளைஞரணி நிர்வாகிகள் அனைவரும் முழு வேலையில் ஈடுபட வேண்டும்” என்று துணை முதல்வர் கூறினார்.
இக்கூட்டத்தில், எம்எல்ஏ.,க்கள் காந்தி ராஜன், மகாராஜன், சரவணக் குமார், திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.