தேர்தல் முடிவுகளுக்குப் பின் திமுக தலைமையிலான கூட்டணியை காப்பாற்றும் வலிமை எனக்கு இல்லை; தமிழ்நாட்டின் அரசியல் நெருக்கடியால் இந்த முடிவை எடுத்தோம் என்பதை மு.க.ஸ்டாலின் அறிவார் – திருமாவளவன்!!

சென்னை:
“தேர்தல் முடிவுகளுக்குப் பின் திமுக தலைமையிலான கூட்டணியை காப்பாற்றும் வலிமை எனக்கு இல்லை. தமிழ்நாட்டின் அரசியல் நெருக்கடியால் இந்த முடிவை எடுத்தோம் என்பதை மு.க.ஸ்டாலின் அறிவார்” என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் விசிக ஆகிய கட்சிகள் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என தவெக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. அதன் பின்னர் தொண்டர்கள் மற்றும் முன்னணி பொறுப்பாளர்களுடன் மீண்டும் இது குறித்து கலந்து பேசினோம். எட்டாம் தேதி நடந்த உயர்நிலை குழு கூட்டத்தில் பெரும்பான்மையான தோழர்கள் ஆதரவு நல்குவது என முடிவெடுத்து விட்ட பிறகு அமைச்சரவையில் இடம்பெறுவது தான் சரியாக இருக்கும் என்ற கருத்தை முன் வைத்தார்கள்.

ஆனாலும் நான் கட்சியின் தலைவர் என்கிற முறையில் பொதுச்செயலாளர்களோடு மீண்டும் பேசிவிட்டு தான் முடிவை எடுப்பேன்; அந்த முடிவு என்னவாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என கூறிவிட்டேன்.

விசிக எடுத்த முடிவுக்கு பதவி ஆசை காரணம் இல்லை. தமிழ்நாட்டின் அரசியல் நெருக்கடியால் இந்த முடிவை எடுத்தோம் என்பதை மு.க.ஸ்டாலின் அறிவார். நானே அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்ற கருத்து வந்தபோது நான் அதற்கு இணங்கவில்லை. அமைச்சரவையில் இடம்பெறுவது உறுதிபடுத்தப்பட்டபோது வன்னி அரசை பரிந்துரைப்பதே சரி என முடிவு செய்தேன்.

தவெக அமைச்சரவையில் இடம்பெற்றது குறித்து மேற்கொண்டு கருத்து சொல்வதற்கு எதுவுமில்லை. தேர்தல் நேரத்தில்தான் யாருடன் பயணிப்பது, கூட்டணி என்பது குறித்த முடிவுகளை எடுப்பது வழக்கம். தேர்தலுக்கு முந்தைய காலத்தில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி நீடிக்க வேண்டும், அக்கூட்டணி வலுப்பெற வேண்டும் என்பதற்காக என்னாலான முயற்சிகளை செய்தேன்.

என்னை ஒரு துருப்புச் சீட்டாக பயன்படுத்தி திமுக கூட்டணியை சிதறடிக்க பல முனைகளில் இருந்தும், பல தரப்பினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். அதற்கு சற்றும் இடம் கொடுக்காமல் நான் உறுதியாக நின்றேன். திமுக கூட்டணியை பலவீனப்படுத்த ஒரு போதும் இடம் தர மாட்டேன் என்பதை நடைமுறைப்படுத்தி காட்டுகிறேன். இதில் யாரும் மாற்றுக் கருத்தை சொல்ல முடியாது. என்னை குறிவைத்து சாதிய, மதவாத கட்சிகள் காய்களை நகர்த்தினார்கள். கோபமூட்டினார்கள்; ஆத்திரமூட்டினார்கள். என்னால் எந்த அளவுக்கு உறுதிணையாக இருக்க முடியுமோ, அந்தளவுக்கு துணையாக இருந்தேன்.

ஆனால் தேர்தலுக்கு பின் கூட்டணியை காக்கும் வலிமை எனக்கு இல்லை. காங்கிரஸ் எடுத்த முடிவை தடுக்கும் வலிமை எனக்கில்லை; கம்யூனிஸ்டுகள் எடுத்த முடிவை நிறுத்த எனக்கு வலிமை இல்லை. தமிழக மக்கள் கூட்டணி ஆட்சியை விரும்புகின்றனர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நிலைபாட்டில் என்னால் தலையீடு செய்ய முடியாது. சமூக ஊடகங்களில் என் மீது மட்டும் அவதூறு கணைகளை வீசிவதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. காலத்தின் கட்டாயத்தால் கூட்டணி ஆட்சி ஏற்பட்டுள்ளது. இடதுசாரிகளின் முடிவை முன்வைத்து எங்கள் கட்சியில் ஆலோசித்து பின்னர் முடிவெடுத்தோம். நாங்கள் திமுக கூட்டணியில் இருந்தோம். ஆதரவு நல்குவதாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் அது எங்களில் உரிமை, சுதந்திரம். அதில் யாரும் தலையிட முடியாது.

திருமாவளவன் ஏன் தாமதப்படுத்துகிறார். தாமதத்துக்கு இது தான் காரணமா என வாய்க்கு வந்தபடி பேசினார்கள். அவதூறுகளை அள்ளி வீசினார்கள். எங்களின் அரசியல் உரிமையையோ, நேர்மையையோ கலங்கப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை. எங்கள் கட்சிக்கு ஒரு விதிமுறை, வரையறை இருக்கிறது.

ஒரு கட்சியை உருவாக்கி அந்த கட்சியை 10 ஆண்டுகள் கட்டுக்கோப்பாக வழி நடத்துவது அவ்வளவு இலகுவான காரியம் கிடையாது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைவர் மு.க.ஸ்டாலினின் கவனத்துக்கு கொண்டு சென்று அவருடைய வாழ்த்துக்களுடன்தான் அல்லது ஆதரவோடுதான் அல்லது இசைவோடு தான் இந்த ஆதரவை ஆட்சி அமைப்பதற்காக வழங்குகிறோம் என்று அறிவித்து விட்டுதான் வழங்கி இருக்கிறோம். குடியரசுத் தலைவர் ஆட்சியை தடுக்க ஆதரவை வழங்கினோம்.

நீங்கள் இவ்வாறு செய்யக்கூடாது என எந்த இடத்திலும் அண்ணன் மு.க.ஸ்டாலின் சொல்லவில்லை. தற்போதைய அரசியல் சூழலை தெரிந்துகொண்டு, அவருடைய பக்குவத்தின் அடிப்படையில் அவர் இந்த விஷயத்தை அணுகினார். நாம் ஒற்றுமையோடு செயல்படுவோம்; தவெக ஆட்சி அமைக்க நாம் இடையூறாக இருக்க வேண்டியதில்லை என தெரிவித்துட்டார். இது அவரின் அரசியல் பக்குவத்தையும், முதிர்ச்சியையும் காட்டுகிறது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வளர்ச்சியை பிடிக்காதவர்கள் தொடர்ந்து காலம் காலமாக எங்களுக்கு எதிராக காழ்ப்புணர்வை கக்கி வருகின்றனர். அவர்கள் திரும்பத் திரும்ப இதை செய்து கொண்டிருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *