தமிழ்நாட்டின் புகழ்பெற்ற சிவன் கோவில்களில் ஒன்றாக திங்களூர் கைலாசநாதர் திருக்கோவில் விளங்குகிறது. இக்கோவில் நவகிரகங்களில் ஒன்றான சந்திரனுக்கு உரிய தலமாக போற்றப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில், கும்பகோணத்திற்கு அருகே திங்களூரில் இக்கோவில் அமைந்துள்ளது.
இறைவன்: கைலாசநாதர்
இறைவி: பெரியநாயகி அம்மன்
தல விருட்சம் – வில்வ மரம்
தீர்த்தம் – சந்திர புஷ்கரணி
தல வரலாறு:
பிரம்மாவின் புதல்வன் தட்ச பிரஜாபதி. தட்சனுக்கு மகள்களாக 27 பெண்கள் மற்றும் சதி தேவி போன்றோர் பிறந்தனர். இந்த பெண்களே 27 நட்சத்திரங்களாகும்.
இவர்களை சந்திர பகவான் திருமணம் செய்துகொண்டார். ஆனால், அவர் ரோகிணி தேவியிடம் மட்டுமே அதிக அன்பு காட்டினார்.
இதுகுறித்து மற்ற பெண்கள் தனது தந்தையிடம் முறையிட்டு வருந்தினர்.
இதனால் கோபமடைந்த தட்சன், சந்திரனை தனது ஒளியை இழக்கும்படி சாபமிட்டார். அந்த சாபத்தின் காரணமாக சந்திரன் தனது பிரகாசத்தையும் சக்தியையும் இழந்தார். ஒவ்வொரு நாளும் அவரது ஒளி குறைந்த வண்ணம் இருந்தது.
சாப விமோசனம் பெறுவதற்காக, சந்திரன் சிவபெருமானை நோக்கி தவம் செய்தார். பல தலங்களுக்கு சென்று சிவனை வழிபட்டார். இறுதியாக திங்களூரில் சிவபெருமானை வேண்டி கடும் தவம் செய்தபோது, சிவபெருமான் அவர்முன் தோன்றி அருள் புரிந்தார்.
தட்சனின் சாபத்தின்படி தேய்ந்தும் சிவபெருமானின் வாரத்தின் படி சந்திரன் மீண்டும் வளர்ந்தார். இதன் காரணமாகவே மாதந்தோறும் சந்திரன் வளர்பிறை மற்றும் தேய்பிறை நிலைகளை அடைகிறான் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
அப்பூதி அடிகள் அவதரித்த தலம்:
நாயன்மார்களில் ஒருவராக போற்றப்படும் அப்பூதி அடிகள் திங்களூரில் வாழ்ந்து வந்தார்.
சிவபெருமானின் அடியார்களில் ஒருவரான அப்பூதி அடிகள், திருநாவுக்கரசர் மீது அளவற்ற பக்தி கொண்டிருந்தார்.
இவர் தனது பிள்ளைக்கும் திருநாவுக்கரசர் என்ற பெயரே வைத்திருந்தார்.
காணும் இடங்களில் எல்லாம் திருநாவுக்கரசர் என்ற நாமம் இடம்பெற்றிருந்தது. “திருநாவுக்கரசர் தண்ணீர்பந்தல்” அமைத்து சேவை செய்து வந்தார். அவர் வீட்டின் பசு, உலக்கை, உரல், என்று அனைத்திற்கும் அவர் பெயரையே வைத்து போற்றி வந்தார்.
ஒருமுறை திருநாவுக்கரசர் திங்களூருக்கு வருகை தந்தார். அவர் வரும் வழியில், அடிகள் அமைத்திருந்த திருநாவுக்கரசர் தண்ணீர்பந் தலைக் கண்டு அப்பூதியின் வீட்டிற்கு சென்றார்.
அவர் வரும் செய்தி அறிந்து அடிகளார் மிகுந்த பரவசம் அடைந்தார். மேலும் அவருக்கு உணவு தயார் செய்தார்.
அவர் வந்ததும் மரியாதைகள் செய்வித்து, உணவு பரிமாற தயார் செய்தார். தன மகனை அழைத்து, கொல்லை புறத்தில் வாழை இலை பறித்து வர கட்டளையிட்டார்.
அவன் இலை பறிக்குக்கும் போது பாம்பு தீண்டியது. இலையுடன் வந்த மகன் தாயின் மடியில் சாய்ந்தபடி மரணித்தான்.
சிவனடியாருக்கு சேவை செய்வதையே முதன்மையாகக் கருதிய அப்பூதி அடிகள், அந்தச் செய்தியை மறைத்தார். இருப்பினும் திருநாவுக்கரசர் இதை அறிந்து கொண்டார்.
பின்னர் திருநாவுக்கரசர் இறைவனை வேண்டி பதிகம் பாடியதும், அப்பூதி அடிகளின் மகன் மீண்டும் உயிர் பெற்றதாக பெரியபுராணம் குறிப்பிடுகிறது.
கோவில் அமைப்பு:
இந்த கோவிலின் கட்டிடக்கலை சோழர் காலத்தை மிளிர்கிறது. கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் மற்றும் விசாலமான பிரகாரங்களை கொண்டு காண்பதற்கே மனதை குளிர்விக்கும் சூழலை இக்கோவில் கொண்டுள்ளது. மேலும் சந்திரபகவானுக்கென்று இக்கோவிலில் தனியாக சன்னதியும் உண்டு.
சிறப்புகள்:
சந்திர தோஷ நிவர்த்தி, மன அழுத்தம் நீங்கி மன அமைதி பெற, குடும்பம் ஒற்றுமை பெற, தாய்-மகன் உறவு மேம்பாட, திருமணத் தடைகள் நீங்க, குழந்தைப் பேறு கிடைக்க, கல்வி மற்றும் நினைவாற்றல் மேம்பட இக்கோவிலுக்கு வந்து சந்திரனையும் மூலவரையும் வழிபாடு செய்வது சிறப்பாகும்.
இத்துடன் சந்திரனுக்கு வெள்ளை ஆடை மற்றும் வெள்ளை மலர்கள் சாற்றி வழிபாடு செய்து பால் தயிர் வெண்ணை போன்றவற்றை நெய்வேத்தியமாக சமர்ப்பித்து வழிபடுவதும் சிறப்பானதாகும்.
பயணம்:
தஞ்சாவூரிலிருந்து(30கி.மீ) சுமார் 45 நிமிடங்கள் முதல் 1 மணி நேரத்தில் திங்களூரை சென்றடையலாம். கும்பகோணத்திலிருந்து சுமார் 35 கி.மீ-ல் இக்கோவில் உள்ளது.
நடைதிறந்திருக்கும் நேரம்:
காலை: 6.00 மணி முதல் 12.30 மணி வரை
மாலை: 4.00 மணி முதல் 8.30 மணி வரை