மதுரை:
டெல்லியில் போராடிய மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து திருப்பரங்குன்றத்தில் ரயிலை மறித்துப் போராடிய நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி டெல்லியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் அமைப்பினர் தாக்கப்பட்டதைக் கண்டித்து இந்திய ஜனநாயக மாணவர் சங்கத்தினர், விவசாய சங்கத்தினர் உள்ளிட்ட சில அமைப்பினர் திருப்பரங்குன்றத்தில் ரயில் மறியல் போராட் டத்தில் ஈடுபட நேற்று திட்டமிட்டனர்.
இதையொட்டி காவல் துணை ஆணையர் இனிகோ திவ்யன் தலைமையில் திருப்பரங்குன்றம் காவல் நிலையம் முன்பிருந்து ரயில் நிலையம் செல்லும் பாதையில் தடுப்புகளை ஏற்படுத்தி போலீஸார் குவிக்கப் பட்டிருந்தனர்.
இருப்பினும் ரயில் நிலையம் அருகே திரண்ட மாணவர் அமைப்பினர் தடுப்புகளைத் தூக்கி எறிந்துவிட்டு உள்ளே நுழைய முயன்றனர்.
அவர்களை போலீஸார் தடுத்தபோதிலும் அதையும் தாண்டி தண்டவாளப் பகுதிக்குள் சென்ற அவர்கள், பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூர் சென்ற ரயிலை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிலர் ரயிலை செல்ல விடாமல் தண்டவாளத்தில் படுத்துக்கொண்டு போராட்டம் செய்தனர்.
போலீஸார் அவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்தினர். மறுத்ததால் அவர்களைக் குண்டுக் கட்டாக தூக்கி தண்டவாளப் பகுதியில் இருந்து அப்புறப்படுத்தினர் .
அப்போது மாணவர் கள்- போலீஸார் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து 35-க்கும் மேற்பட்ட மாணவ அமைப்பினர், மாதர் சங்கத்தினர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.