பள்ளி மாணவர்களை பார்க்கும் போது எனக்கும் இளமை திரும்புகிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெறும் ‘ஐம்பெரும் விழாவில்’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர் , பள்ளிக்கல்வித்துறை நிகழ்ச்சிகளில் ஆர்வமாக நான் கலந்துகொள்வேன்; ஆனால் என்னைவிட ஆர்வமாக கலந்து கொள்பவர் அமைச்சர் உதயநிதி தான்; தேர்தல் நடத்தை விதிகள் முடிந்தவுடன் நான் கலந்து கொள்ள வேண்டிய முதல் விழா இதுவாக இருக்க வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஸிடம் சொல்லி இருந்தேன்.
பள்ளி மாணவர்களை பார்க்கும் போது எனக்கும் இளமை திரும்புகிறது. மாணவிகள் போல் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் தமிழ் புதல்வன் திட்டம்; நான் பிரச்சாரத்துக்கு சென்றிருந்தபோது பலரும் புதுமைப்பெண் திட்டத்தை பாராட்டி பேசினர் .
அதேபோல் அரசுப் பள்ளியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு, ஆகஸ்ட் முதல் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் மாதம் ரூ. 1000 வழங்கப்படும்.
10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தில் 100-க்கு 100 எடுத்தவர்களுக்கு சிறப்பான பாராட்டுகள் வழங்க உள்ளோம்; 12-ம் வகுப்பில் 35 பேரும், 10-ம் வகுப்பில் 8 பேரும் தமிழில் 100-க்கு 100 பெற்றுள்ளனர்; அந்த மாணவர்களுக்கு ரூ.10,000 வழங்கி பாராட்ட உள்ளோம்” என்றார்.