புதுச்சேரியில் பொதுத்தேர்வுகளில் முதல் 3 இடங்களைப் பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.
கடந்த 31ம்தேதி புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் உரையாற்றி தொடக்கி வைத்தார். இந்நிலையில் இன்று நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி சட்டப்பேரவையில் 2024-2025-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். வழக்கமாக 9.30 மணிக்குகூடும் பேரவை, இன்று காலை 9 மணிக்கே கூடியது.
அத்துடன் வெள்ளிக்கிழமை 10.30 மணி முதல் 12 மணி வரை ராகுகாலம் என்பதால் நல்ல நேரத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்ய முதல்வர் ரங்கசாமி முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது. அதன்படி காலை 9.05 மணிக்கே 156 பக்கம் கொண்ட பட்ஜெட் புத்தகத்தை வாசிக்க தொடங்கினார்.
இந்த பட்ஜெட் உரை நிகழ்வில், பாஜக அதிருப்தி எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்ட் ஜான்குமார், சுயேட்சை எம்.எல்.ஏக்களான அங்காளன், அசோக் ஆகியோர் 5 நிமிடம் கழித்து உள்ளே வந்தனர். இதனால் பேரவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பட்ஜெட் உரையில் புதுச்சேரிக்கு ரூ.10,996 கோடி வருவாய் செலவினம் எனவும், ரூ.1330 கோடி மூலதன செலவினம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பட்ஜெட்டில் இடம்பெற்ற முக்கிய அறிவிப்புகள்:
“குடிமை பொருள் வழங்கல் துறை மூலம் அனைத்து சேவைகளும் இணைய வழியில் செயல்படும்.
பள்ளி மாணவர்கள்
பெயர் சேர்த்தல், நீக்கல், புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது உள்ளிட்ட பணிகள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
இந்த ஆண்டு முதல் ரேஷன் கடைகள் திறந்து அதன் மூலம் இலவச அரிசி, மானிய விலையில் பருப்பு வகைகள், சர்க்கரை, சமையல் எண்ணெய் ஆகியவைகள் வழங்கப்படும்
புதுச்சேரியில் மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை ரூ.6500-லிருந்து ரூ.8000 ஆக உயர்வு.
மழைக்கால நிவாரத் தொகை ரூ.3000-லிருந்து ரூ.6000 ஆக உயர்த்தி வழங்கப்படும்
6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்துவிட்டு, இளநிலை கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூபாய் 1000 மானியம் உதவித்தொகை வழங்கப்படும்
பொதுத்தேர்வுகளில் முதல் 3 இடங்களைப் பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு முறையே ரூ.20,000, ரூ.15,000 மற்றும் ரூ.10,000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.
பாடங்கள் வாரியாக நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.” என்று அறிவித்தார்.
மேலும், 10.20 மணிக்கு ரங்கசாமி பட்ஜெட் உரையை நிறைவு செய்தார். சட்டமன்ற கூட்டத்தொடரை திங்கட்கிழமை காலை 9:30 மணிக்கு பேரவைத் தலைவர் செல்வம் ஒத்தி வைத்தார்.