எதிர்க்கட்சியினரை கோமாளிகள் என்று சொல்பவர்கள்தான் ஏமாளிகளாக போவார்கள் ; தமிழிசை விமர்சனம்!!

சென்னை:
எதிர்க்கட்சியினரை கோமாளிகள் என்று சொல்பவர்கள்தான் ஏமாளிகளாக போவார்கள் என தமிழிசை தெரிவித்தார்.

தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசையின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் இலவச மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது.

இதனை தொடங்கி வைத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கின் தீர்ப்பு, இனி யாரும் குற்றம் இழைக்கக் கூடாது எனும் வகையில் இருக்கும் என நம்புகிறோம்.

ஆனால், அரக்கோணத்தில் இருந்து இன்னொரு கூக்குரல் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது.

தமிழகத்தில் பல இடங்களில் இதுபோன்ற பாலியல் குற்றங்கள் நடந்து கொண்டு இருக்கிறது. இருந்தாலும் அவற்றிற்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை.

பாலியல் குற்றவழக்குகளை உயர் நீதிமன்றம் விரைவுபடுத்தியபோது, ஏதோ தங்களுடைய சாதனைகள்போல முதல்வர் பேசிக்கொண்டிருக்கிறார். அப்படி என்றால் குற்றம் நடந்தது யாருடைய சாதனை. திமுக அரசு எதில் பெருமை கொள்கிறது என்பது புரியவில்லை.

தமிழகம் எதை நோக்கிச் செல்கிறது என்று புரியவில்லை. முதல்வர் நிறைவேற்றிய தீர்மானத்தில் கோமாளிகள் என்ற வார்த்தை பயன்படுத் தப்பட்டிருக்கிறது.

எதிர்க்கட்சியினரை கோமாளிகள் என்று சொல்வது ஆணவத்தின் வெளிப்பாடு. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கோமாளிகள் என்று சொல்பவர்கள் ஏமாளிகளாக போவார்கள்.

உதயநிதிக்கு பக்கபலமாக இருக்க வேண்டும் என்பதையெல்லாம் ஒரு தீர்மானமாக நிறைவேற்றியுள்ளனர். இந்தாண்டு மட்டும் தமிழகத்துக்கு ரயில்வேயில் ரூ.8,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ரூ.8 லட்சம் கோடி கடனை ஏற்படுத்திய தமிழக அரசு, ரூ.80,000 கோடிக்கு மேல் மக்கள் மீது வட்டியை சுமத்தி இருக்கிறது. இவர்கள் மற்றவர்களை கோமாளிகள் என்கின்றனர். இவ்வாறு கூறினார்.

இதைத்தொடர்ந்து, தேனாம்பேட்டை பகுதியில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *