மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் போல் சோர்ந்து போகாமல் போராட வேண்டும் – மாணவர்கள் மத்தியில் முதலமைச்சர் எழுச்சி உரை !

உயர்கல்வியில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க வேண்டும் என்று, மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்ற மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப் பெண்’ திட்டம் கடந்த 2022-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து மாணவிகளை மட்டுமல்ல, மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ‘தமிழ்ப் புதல்வன் திட்டம்’ என்ற திட்டத்தை அறிவித்து, கோயம்புத்தூரில் உள்ள அரசு கலை கல்லூரியில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், பொன்முடி, அன்பில் மகேஸ், கீதா ஜீவன், முத்துச்சாமி, எ.வ.வேலு, தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, கோவை எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். தொடர்ந்து திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவர்களுக்கு Debit Card அட்டையை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மாணவர்கள் கல்விக்காக திராவிட மாடல் அரசு என்றும் துணை நிற்கும் என்று உறுதியளித்தார். மேலும் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் போல் சோர்ந்து போகாமல் போராட வேண்டும் என்று ஊக்குவித்தார்.

இதுகுறித்து முதலமைச்சர் பேசியதாவது, “திராவிட மாடல் அரசை வழிநடத்தும் முதலமைச்சரான நான், ஒரு தந்தை நிலையிலும், உங்கள் குடும்பத்தில் ஒருவனாகவும் இருந்து, மாணவக் கண்மணிகளாகிய உங்களுக்காக உருவாக்கிய திட்டம் தான் இந்தத் திட்டம்! இதன் மூலமாக, நீங்கள் அடைகின்ற வளர்ச்சியை, அடுத்தடுத்த ஆண்டுகளிலும் நான் கவனமாக கண்காணிப்பேன்!

முதலாவது, நான் உங்களிடத்தில் கேட்டுக் கொள்ள விரும்புவது, 2030-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்த வேண்டும். இதன்மூலம், வளர்ச்சியடைந்த மேலை நாடுகளுக்கு இணையான கட்டமைப்பு வசதிகள் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உயரும்.

இரண்டாவது, எல்லாக் குழந்தைகளும் உயர்கல்வி படிக்க வேண்டும்! எந்தக் காரணத்தை கொண்டும், பள்ளிப்படிப்பு முடிந்ததும், ஒரு மாணவர் கூட உயர்கல்வி கற்காமல், திசைமாறி சென்றுவிடக்கூடாது. கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் எல்லோரும் தங்களின் கல்வித் தகுதிக்கேற்ப, நல்ல வேலைவாய்ப்புகளை பெறவேண்டும். நம்முடைய மாணவர்கள் உயர்கல்வி பல பயின்று, வாழ்க்கையில் சிறக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவு!

இந்த இலக்குகளை அடைவதற்காக தான், நான் கடுமையாக உழைத்து புதிய பல திட்டங்களை உருவாக்கியிருக்கிறேன். மாணவக் கண்மணிகளான நீங்கள் எல்லோரும் இதுபோன்ற திட்டங்களை பயன்படுத்திக் கொள்ளவேண்டும். படித்து, நல்ல உயரங்களை அடைந்து, உங்களுக்காகவும், உங்கள் குடும்பத்தின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபடவேண்டும்.

வறுமை இல்லாத, சமத்துவம் வாய்ந்த, ஒரு அறிவார்ந்த தமிழ்ச் சமுதாயத்தை நாம் வருங்காலத்தில் உருவாக்க வேண்டும். உலக அளவில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு விளங்க வேண்டும். மாணவர்கள் கல்வி கற்க எதுவும் தடையாக இருக்கக் கூடாது. தடங்கல் ஏற்பட்டால், அதை உடைத்தெறிந்து மாணவ சமுதாயம் வெற்றி பெறவேண்டும். அதற்கு வேண்டிய உதவிகளை செய்ய, நான் இருக்கிறேன்! நம்முடைய திராவிட மாடல் அரசு இருக்கிறது!

ஒலிம்பிக்கில் பங்கேற்ற சகோதரி வினேஷ் போகத் அவர்கள், தன்னுடைய வாழ்க்கையில் எப்படிப்பட்ட தடங்கல்களை எதிர்கொண்டார் என்று உங்கள் எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். ஆனால், அவர் பலவீனமானவராக வீட்டுக்குள் முடங்கிவிடாமல், தைரியமும், தன்னம்பிக்கையும், அசாத்திய துணிச்சலும் உள்ள பெண்ணாக போராடி, இன்றைக்கு நாம் எல்லோரும் பாராட்டக் கூடிய அளவிற்கு அவர் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கிறார்.

ஒன்றை மட்டும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். “தடைகள் என்பது உடைத்தெறியத்தான்!” தடைகளைப் பார்த்து நீங்கள் ஒருபோதும் சோர்ந்துவிடக் கூடாது! முடங்கிவிடக் கூடாது! வெற்றி ஒன்றே உங்கள் இலக்காக இருக்கவேண்டும்! அதை குறி வையுங்கள்! நிச்சயம் ஒருநாள் வெற்றி வசப்படும்! உங்கள் மேல் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைவிட, அதிக நம்பிக்கையை நான் உங்கள் மேல் வைத்திருக்கிறேன்!

உங்களுக்கு பின்னால், உங்கள் பெற்றோர், உங்கள் குடும்பம் மட்டுமல்ல; என்னுடைய திராவிட மாடல் அரசும் இருக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்! மறந்துவிடாதீர்கள்! வாழ்க்கையில் பல வெற்றிகளைப் பெற போகும் புதுமைப் பெண்களுக்கும், தமிழ்ப்புதல்வர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள்!” என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *