தலைமைச் செயலகத்தில் பெண் செய்தியாளருக்கு மிரட்டல் விடுத்த ஆதிதிராவிடர் நலத்துறை மாவட்ட அலுவலர் வெற்றிச்செல்வனை பணி நீக்கம் செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் !!

தலைமைச் செயலகத்தில் பெண் செய்தியாளருக்கு மிரட்டல் விடுத்த ஆதிதிராவிடர் நலத்துறை மாவட்ட அலுவலர் வெற்றிச்செல்வனை பணி நீக்கம் செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் மாணவிகள் விடுதிகளின் அவல நிலை குறித்து விளக்கம் அளிப்பதாக அத்துறையின் செயலாளர் லட்சுமிப் பிரியா அழைத்ததன் அடிப்படையில் அவரை சந்தித்து நேர்காணல் எடுத்த நியூஸ் தமிழ் 24*7 தொலைக்காட்சியின் பெண் செய்தியாளர் லதா என்பவரை ஆதிதிராவிடர் நலத்துறையின் மாவட்ட அலுவலர் வெற்றிச் செல்வன் என்பவர் மிரட்டி வெளியேற்றும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. செய்தியாளரை அரசு அதிகாரி மிரட்டுவது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் நல மாணவ, மாணவியர் விடுதிகள் மிக மோசமாக பராமரிக்கப்படுகின்றன என்பது அனைவரும் அறிந்த உண்மை. அதை அம்பலப்படுத்த வேண்டியது செய்தியாளர்களின் கடமை. அதைத் தான் பெண் செய்தியாளர் செய்திருக்கிறார்.

அதற்காக அவரை எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை சட்டத்தில் வழக்கு தொடர்ந்து கைது செய்வோம் என்று மாவட்ட அலுவலர் மிரட்டுவது அவரது அதிகாரத் திமிரைத் தான் காட்டுகிறது.

அதுவும் ஒரு துறையின் செயலாளர் நேர்காணல் கொடுத்துக் கொண்டிருக்கும் போது குறுக்கே புகுந்து இத்தகைய மிரட்டலை விடுக்கிறார் என்றால், செயலாளரை விட அவர் அதிகாரம் பெற்றவரா? என்ற வினா எழுகிறது.

பெண் செய்தியாளரை மிரட்டி அலுவலகத்திலிருந்து வெளியேற்றிய அதிகாரி வெற்றிச் செல்வனை பணி நீக்கம் செய்ய வேண்டும். பெண் செய்தியாளர் மிரட்டப்படுவதை தடுக்காமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த துறை செயலாளர் லட்சுமிப் பிரியாவிடம் இது குறித்து அரசு விளக்கம் பெற வேண்டும்.

செய்தியாளர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக, ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகளை முறையாக பராமரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *