சென்னை:
பாமக தலைவர் அன்புமணி தனது 56-வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினர். அவருக்கு பிரதமர்மோடி, அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி: அமிர்த காலத்தின்போது புகழ்பெற்ற, வளர்ந்த இந்தியாவை கட்டியெழுப்பும் நோக்கில் நாம் முன்னேறி செல்கிறோம். தேசத்தை முன்னேற்ற பாதையில், புதிய உச்சத்துக்கு கொண்டு செல்வதில் உங்களது தொடர்ச்சியான பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
மத்திய இணையமைச்சர் எல்.முருகன்: தமிழகத்தின் வளர்ச்சிக்கு சமரசமின்றி தொடர்ந்து குரல் கொடுத்து வரும் அன்புமணியின் சமுதாயப் பணிகள் தொடர்ந்திடவும், வாழ்வின் அனைத்து விதமான மகிழ்வும், ஆரோக்கியமும் பெற்று இன்புற வாழ்ந்திடவும் இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை: மத்திய அமைச்சர் பொறுப்பில் துறை சார்ந்தும், சமூகம் சார்ந்தும் அன்புமணி மேற்கொண்ட அரும்பணிகள் என்றும் அவரது மக்கள் நலன் சார்ந்த அரசியலுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. அவரது மேலான பணிகள் என்றும் தொடர, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: பாமக தலைவர் அன்புமணிக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ்ந்து, பொதுமக்களுக்கு சேவையாற்ற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்: சமூகநீதிக்காகவும், தமிழ்ப்பேரினத்தின் நல்வாழ்வுக்காகவும், தமிழின உரிமைபாதுகாப்புக்காகவும் பாமக தலைவர் அன்புமணியின் பெரும்பணிகள் யாவும் தொடரட்டும். சிறக்கட்டும்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: சமூக நீதி, சமத்துவம், நீடித்த வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு பயணிக்கும் அன்புமணி பூரண உடல்நலத்தோடும், நீண்ட ஆயுளோடும் தொடர்ந்து, மக்கள் பணியாற்ற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இதேபோல், தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய், பாமக தலைவர் அன்புமணிக்கு தொலைபேசி வாயிலாக பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது, அவர்களின் உரையாடல் 5 நிமிடம் நீடித்ததாக கூறப்படுகிறது.