ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! மக்களை எப்படி பாதுகாக்கப் போகிறது தமிழக அரசு? – டிடிவி தினகரன்……

“சென்னை மாநகர் மக்களின் இயல்பு வாழ்க்கையை முழுவதுமாக முடக்கிய ஒரு நாள் மழை, அடுத்தடுத்த மழை, வெள்ள பாதிப்பிலிருந்து மக்களை எப்படி பாதுகாக்கப் போகிறது தமிழக அரசு?” என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு முதல் பெய்து வரும் தொடர் மழையால் மாநகர் முழுவதுமே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முழுவதுமாக முடங்கியிருக்கிறது.

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை பின்பற்றி அறிவிப்புகளையும், அறிக்கைகளையும் வெளியிட்ட தமிழக அரசு, மழையால் பாதிக்கப்படும் பொதுமக்களை பாதுகாக்க எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதற்கு இன்றைய நிகழ்வுகளே சாட்சியாக அமைந்திருக்கின்றன.

ஒவ்வொரு ஆண்டும் பருவமழையின் போதும், வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடரின் போதும் பெரும்பலான பகுதிகளில் குளம் போல மழைநீர் தேங்கி நிற்பதும், சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதும் சென்னை மாநகராட்சியின் மூலம் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வரும் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளை கேள்விக்குள்ளாக்குகிறது.

பொதுமக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்றும் வகையில் கட்டணங்களையும், வரிகளையும் உயர்த்துவதில் சென்னை மாநகராட்சி செலுத்தும் கவனத்தை, மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளில் செலுத்தியிருந்தால், இந்தளவிற்கு பாதிப்பை சந்தித்திருக்க முடியாது என பொதுமக்கள் தங்களின் குமுறலை வெளிப்படுத்தி வருகின்றனர்.

எனவே, ஆலோசனைக் கூட்டங்கள் நடத்துவதும், அறிவிப்புகளை வெளியிடுவதும் எந்த வகையிலும் பலனளிக்காது என்பதை இனியாவது உணர்ந்து, முழுமையான களப்பணியில் ஈடுபட்டு மழை, வெள்ளத்திலிருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என சென்னை மாநகராட்சியையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *