”வருகிற 16-ந்தேதி கார்த்திகை மாதம் பிறக்கிறது, இதையொட்டி மாலை அணிய தயாராகி வரும் ஐயப்ப பக்தர்கள்!!

சென்னை:
புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் மண்டல பூஜை, மகர விளக்கு தரிசனத்துக்காக கார்த்திகை மாதம் 1-ந் தேதி மாலை அணிவது வழக்கம்.

41 நாட்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி தலையில் சுமந்து சென்று ஐயப்பனை தரிசனம் செய்வார்கள்.

கார்த்திகை பிறக்க இருப்பதால் இனி 60 நாட்கள் தமிழகத்தில் சரண கோஷம் ஒலிக்க உள்ளது.

வருகிற 16-ந்தேதி (சனிக்கிழமை) கார்த்திகை மாதம் பிறக்கிறது. இதையொட்டி சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருக்க தயாராகி வருகின்றனர்.

பக்தர்கள் தங்களின் இஷ்ட தெய்வங்களை வணங்கி அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று குருசாமி, கோவில் குருக்கள் முன்னிலையில் பயபக்தியுடன் சரண கோஷம் முழங்க மாலைகளை அணிந்து கொள்வார்கள்.

இந்த முறை கார்த்திகை முதல் தேதியில் கரிநாள் என்பதால் ஐயப்ப பக்தர்கள் இடையே அன்று மாலை அணிவதா? வேண்டாமா என்ற தயக்கம் இருந்தது. ஆனால் ஆன்மீக பெரியவர்கள், குருசாமிகள் அன்று மாலை அணிவதில் தவறு இல்லை என்று கூறியுள்ளதால் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிய தயாராகி வருகிறார்கள்.

கார்த்திகை முதல் நாளில் மாலை அணிவித்தால் நல்ல நேரம் பார்க்க தேவையில்லை. பிற நாட்களில் மாலை அணிவிக்கும் போது நல்ல நேரம் பார்த்து மாலை அணிவிக்க வேண்டும்.

இதுபோல பல விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் ஐயப்பனை தரிசிக்க செல்லும் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இரவு உறங்கும் போது தரையில் தான் படுத்துக் கொள்ள வேண்டும். புதிதாக ஒரு பாய் வாங்கி அதை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாலை அணிந்த காலத்தில் அனைவரிடமும் மரியாதையாக, சாந்தமாக பேச வேண்டும் என்ற மற்றொரு நியதி உண்டு.

பார்க்கும் அனைவரையும் ஐயப்பனின் ரூபமாக பார்க்க வேண்டும் என்பதால் தான் மனைவியை கூட “சாமி” என்று அழைக்க வேண்டும்.

மாலை அணிபவர்கள் குறைந்தது ஒரு மண்டலம் அல்லது 41 நாட்கள் விரதம் இருப்பது அவசியம். மகர ஜோதி தரிசனம் செல்பவர்கள் 60 நாட்கள் விரதம் இருப்பது வழக்கம்.

பக்தர்கள் தங்களுடைய தாய், தந்தை, குருசாமி யார் ஒருவர் மூலமும் மாலையை அணிந்து கொள்ளலாம். குருசாமி இல்லாதோர் கோவிலில் சுவாமி சன்னதியில் மாலையை வைத்து பூஜித்து அர்ச்சகர் மூலமாக மாலையை அணியலாம்.

மாலை அணிவதற்கு பக்தர்கள் ருத்திராட்ச மணி மாலை, துளசி மாலைகளை பயன்படுத்துவது சிறந்தது. மாலை அணிந்த பக்தர்கள் செருப்பு அணிதல் கூடாது. கருப்பு, நீலம், பச்சை அல்லது காவி நிறத்தில் வேட்டிகள் அணிதல் வேண்டும்.

மாலை அணியும் பக்தர்கள் முக்கியமாக கோப தாபங்களையும், விரோத மனப்போக்கையும் தவிர்ப்பது அவசியம். அக்கம்பக்கத்தினருடன் விரோதம் கூடாது. மாலையை எக்காரணம் கொண்டு கழற்றுதல் கூடாது.

விரத நாட்களில் புகைப்பழக்கம், குடிப்பழக்கம், புகையிலை பொருட்களை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பலர் மாலையை கழற்றி வைத்து விட்டு மது அருந்திவிட்டு குளித்து விட்டு மீண்டும் மாலை அணிந்து கொள்ளலாம் என நினைக்கின்றனர். இது முற்றிலும் தவறான எண்ணம்.

காலையில் சூரிய உதயத்துக்கு முன்பாகவும், மாலையில் சூரியன் அஸ்தமனத்திற்கு பிறகும் நீராடி கோவில்களிலோ அல்லது வீடுகளிலோ ஐயப்பனை மனதார வேண்டி சரணங்கள் கூறி வணங்குதல் வேண்டும்.

பிரம்மச்சரிய விரதத்தை முறையாக முழுமையாக கடைபிடித்தல் வேண்டும். அசைவம் உண்ண கூடாது. சபரிமலை யாத்திரை செல்லும் முன் பக்தர்கள் வீடுகளில் பூஜைகள் நடத்தி எளியோருக்கு அன்னதானம் செய்தல் சிறப்பை தரும்.

முதன் முறையாக மாலை அணியும் கன்னி சாமிகள் மாலை அணியவும் , சபரிமலை செல்லவும் காத்திருகின்றனர். கன்னிசாமிகள் குருசாமி இன்றி மாலை அணியக்கூடாது. ஏனென்றால் அப்போதுதான் அவர் ஐயப்பனுக்கு என்னென்ன விரத முறைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து எடுத்து கூறுவார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *