சென்னை:
கரோனாவால் உயிரிழந்த முன்களப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை மற்றும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுகவின் தேர்தல் அறிக்கையில் “பணியில் இருந்தபோது கரோனா தொற்று தாக்கி உயிரிழந்த மருத்துவர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள், நகராட்சி மற்றும் அரசு அலுவலர்கள், காவலர்கள் போன்ற முன்களப் பணியாளர்களின் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால், திமுக அரசு பொறுப்பேற்று மூன்றரை ஆண்டுகள் கடந்த நிலையில், அதை செயல்படுத்தவில்லை.
திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவர் விவேகானந்தன் 2020 நவ. 22-ம் தேதி கரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். அவருக்கு மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர்.
அவர் இறந்து 4 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில், இதுவரை அவருக்கு தமிழக அரசு சார்பில் இழப்பீடோ, கருணை அடிப்படையிலான வேலையோ வழங்கவில்லை. மருத்துவரின் தந்தைதான் அந்தக் குடும்பத்தை தற்போது காப்பாற்றி வருகிறார்.