சேலத்தில் மாசி அமாவா சையையொட்டி மயான கொள்ளை நிகழ்ச்சி – ஆடு, கோழிகளை கடித்தபடி பக்தர்கள் ஆக்ரோஷத்துடன் ஊர்வலம்!!

சேலம்:
சேலத்தில் மாசி அமாவாசையையொட்டி மயான கொள்ளை நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி ஆடு, கோழிகளை கடித்தபடி பக்தர்கள் ஆக்ரோஷத்துடன் ஊர்வலமாக வந்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி விழாவிற்கு அடுத்து வரும் மாசி அமாவாசை அன்று நடக்கும் மயான கொள்ளை நிகழ்ச்சி சேலத்தில் மிகவும் பிரபலமானது. பல 100 ஆண்டுகளாக இந்த மயான கொள்ளை நிகழ்ச்சி நடந்து வருகிறது.

அதன்படி மாசி மாத அமாவாசையான இன்று சேலம் மாநகரில் பல்வேறு இடங்களில் மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது.

குறிப்பாக சேலம் டவுன் தேர்வீதி, ஜான்சன்பேட்டை, வின்சென்ட், கிச்சிப்பாளையம் நாராயண நகர் ஏரிக்கரை மற்றும் ஆண்டிப்பட்டியில் உள்ள அங்காளம்மன் கோவில்கள் உள்பட பல்வேறு அங்காளம்மன், பெரியாண்டிச்சி அம்மன் கோவில்களில் மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த கோவில்களில் இருந்து சாமி சிலைகளை அலங்கரித்து பக்தர்கள் மேளதாளங்களுடன் ஆங்காங்கே உள்ள சுடுகாட்டிற்கு ஊர்வலமாக எடுத்து சென்றனர். சாமி சிலைகளுக்கு முன்னால் பக்தர்கள் காளி, அங்காள பரமேஸ்வரி உள்பட பல்வேறு அம்மன்கள் வேடம் அணிந்து ஆடியவாறு சென்றனர். அப்போது, வழிநெடுக திரளான பக்தர்கள் நின்று தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தி, சாமியாடியவாறு வந்தவர்களிடம் ஆடு, கோழிகளையும், முட்டைகளையும் கொடுத்து வேண்டிக்கொண்டனர்.

மேலும் ஆட்டுகுட்டிகளை வாங்கிய பக்தர்கள், அதை தங்கள் கழுத்து மேல் தூக்கி போட்டு ஆடியதோடு, ஆட்டின் குரல்வளையை கடித்து ரத்தம் குடித்ததையும் காண முடிந்தது. இது ஒருபுறம் இருக்க, சில பக்தர்கள் கோழியை வாயில் கவ்வியபடி அதன் ரத்தத்தை குடித்தவாறு ஆடிக்கொண்டு சுடுகாட்டை நோக்கி சென்றனர்.

மேலும், சில பக்தர்கள் சுடுகாட்டின் புதைக்குழியில் கிடந்த இறந்த மனிதர்களின் மண்டை ஓடு மற்றும் எலும்புகள் ஆகியவற்றுடன் ஆடு, கோழிகளை வாயில் கவ்வியபடி ஆக்ரோஷத்துடன் ஊர்வலமாக சென்றனர்.

இந்த காட்சிகள் சாலையில் நின்றிருந்த பொதுமக்களை மெய்சிலிர்க்க வைத்தது. சேலம் ஜான்சன்பேட்டை பிள்ளையார் நகர் பகுதியில் உள்ள காக்காயன் சுடுகாட்டில் நேற்று மயான கொள்ளை நிகழ்ச்சியை யொட்டி ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்தனர்.

அப்போது பல்வேறு இடங்களில் இருந்து ஆக்ரோஷத்துடன் சாமியாடி வந்த பக்தர்கள் அங்கு கூடியிருந்த பொதுமக்களுக்கு விபூதி கொடுத்து ஆசி வழங்கினர். மேலும், தீராத நோய்கள் குணமாகவும், திருமண தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் வேண்டியும் தரையில் படுத்திருந்த பக்தர்கள் மீது சாமி வேடம் அணிந்திருந்தவர்கள் தாண்டி ஆக்ரோஷமாக சென்றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *