நாகை மாவட்டம் பாப்பாகோவில் ஊராட்சி பெரியநரியங்குடி தொடக்கப் பள்ளியில் உள்ள நிவாரண முகாமில் தங்கியுள்ள பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஸ் !!

நாகப்பட்டினம்:
“டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக, நாகை மாவட்டத்தில் உள்ள 5400 ஹெக்டேர் பரப்பிலான வயல்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. அதிகபட்சமாக, தலைஞாயிறு பகுதி வயல்வெளிகளில் 60% தண்ணீர் சூழ்ந்துள்ளது. மழை நின்ற பிறகு, சேதங்களைக் கணக்கிட்டு நிவாரணம் வழங்கப்படும்,” என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நெல் பயிரிடப்பட்டுள்ள வயல்வெளிகளில் தண்ணீர் சூழந்துள்ளது. திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழையால் பயிர்கள் அழுகியதாக விவசாயிகள் குற்றம்சாட்டியிருந்தனர்.

இந்நிலையில், மழை பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக அமைச்சர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். நாகை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: தொடர்ந்து புதன்கிழமை மாலையில் இருந்து, நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு நேரடியாக சென்றேன். கனமழையால் சேதமடைந்துள்ள பயிர்களைப் பார்வையிட்டேன்.

அதேபோல், மழையால் பாதிக்கப்பட்ட மக்களை பள்ளிகளில் தங்க வைத்திருக்கிறோம். அவர்களது பாதுகாப்பை உறுதி செய்து, அவர்களுக்குத் தேவையான உதவிகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

நேற்று விசிக சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ் மழை பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டுச் சென்றார்.

அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்து வருகின்றனர். இன்று நான், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி உடன் சேர்ந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்திருக்கிறோம்.

ஒட்டுமொத்தமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் 5400 ஹெக்டேர் அளவுக்கு தண்ணீர் சூழ்ந்துள்ளது என்றால், அதில் 3000 முதல் 3500 ஹெக்டேர் வரை தலைஞாயிறு பகுதியில்தான் அதிகபட்சமாக, பயிர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறது. நாகை மாவட்டத்தில் வயல்களில் வடிகால் வசதிகள் இருப்பதால், மழை ஒரு 10-15 நிமிடங்கள் நின்றால், வடிகால் வழியாக அந்த தண்ணீர் வடிந்து செல்லும்.

இன்னும் இரண்டு தினங்களுக்கு அதிகப்படியான மழை வரவில்லை என்றால், பயிர்கள் தப்பித்துக் கொள்ளும் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

மேலும், இரண்டு முதல் இரண்டரை மாத காலத்துப் பயிர்கள் என்பதால், தண்ணீர் தேங்கினால் ஒரு பத்து நாட்கள் வரை தாங்கும் என்று கூறுகின்றனர். அதன்பிறகுதான் அந்த பயிர்கள் அழுகிவிட்டதா? நிவாரணம் தேவையா என்பதை பார்க்க வேண்டும். எனவே மழை நின்ற பிறகு, தண்ணீர் எல்லாம் வடிந்த பிறகு, எங்கெல்லாம் பாதிப்பு இருக்கிறதோ அதை மாவட்ட நிர்வாகம் கணக்கிட்டு அளிக்கும்போது, நிவாரணம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *