விழுப்புரம் மாவட்டத்தில் புயல் மற்றும் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புயல் மழையின் கோரத் தாண்டவத்தால் விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்கள் பெரிதும் சேதமடைந்துள்ளன. பல்வேறு பகுதிகளில் இன்னும் வெள்ள நீர் சூழ்ந்து, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மீட்புப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள திமுக அரசை வலியுறுத்துகிறேன்.திண்டிவனத்தில் கிடங்கல் ஏரியில் இருந்து நாகலாபுரம் செல்லும் பாலம் உடைந்து, திமுக ஆட்சியால் மூன்றாண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால், ஏரியின் உபரி நீர் நகரத்துக்குள் வெள்ளமாக செல்கிறது.
சிறப்பான ஆட்சி நடத்துவதாக சொல்லும் திரு.மு.க.ஸ்டாலின் இங்கு வந்து பார்த்தால் இந்த ஆட்சியின் அவல நிலை தெரியும்!20 செ.மீ. மழை பெய்தாலும் சென்னையின் சாலைகளில் ஒரு சொட்டு தண்ணீர் கூட தேங்காது என்றார்கள்.அஇஅதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட வடிகால் பணிகள், திமுக ஆட்சியில் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் தான் சென்னையில் இன்னும் தண்ணீர் தேங்கும் நிலை நீடிக்கிறது , இது மிகவும் கண்டனத்திற்குரியது.
மேலும், #Fengal புயல் மற்றும் பருவ மழையால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களை முழுமையாகக் கணக்கெடுத்து, உரிய நிவாரணம் வழங்கவும் திரு. மு.க.ஸ்டாலினின் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என குரிப்பிட்டுள்ளார்.