திருவண்ணாமலையில் மண்ணில் புதையுண்டு இறந்த 7 பேரின் உறவினர்கள் சசிகலா காலில் விழுந்து கதறினர்.
திருவண்ணாமலை வ உ சி நகர் 11வது தெருவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை தீபமலையில் மண்சரிவு ஏற்பட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும், உறவினர்களின் குழந்தைகள் மூன்று பேரும் என ஏழு பேர் மண்ணில் புதையுண்டு பல்வேறு மீட்பு பணிகளுக்கு இடையே நேற்று ஐந்து பேரின் உடல்கள் மீட்கப்பட்டது.
தொடர்ந்து இன்றும் மீட்பு பணிகள் நடைபெற்று மீதமுள்ள இரண்டு உடல்கள் மீட்கப்பட்டு ஆக ஏழு உடல்கள் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரசியல் பிரமுகர் விகே சசிகலா இன்று இறந்தவர்களின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூற வருகை தந்தார். முன்னதாக மண் சரிவில் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் இரு சக்கர வாகனங்களை பார்வையிட்டார்.
தொடர்ந்து பிரேதங்கள் வைக்கப்படும் வீதிக்கு சென்ற அவர்,பிரேதங்கள் மருத்துவமனையில் இருந்து வராததால் உறவினர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
ஆறுதல் கூற வந்த அவரிடம் உறவினர்கள் கண்ணீர் மல்க குறைகளை கூறினார். குறிப்பாக இறந்தவர்களின் உறவினர்களை சந்திக்க வந்த அவர், இரு கைகளிலும் கையுறைகள் அணிந்து அவர்களை சமாதானப்படுத்தினார்.