தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேலூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களின் ஆய்வுக் கூட்டத்தின்போது, பொதுமக்களுக்காக சிறப்பாக சேவையாற்றிய அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து அரசு துறைகளின் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று (6.12.2024) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்புத் திட்டங்களான முதல்வரின் முகவரி, மக்களுடன் முதல்வர் திட்டம், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம், குடிநீர் திட்டப் பணிகள், மக்களைத் தேடி மருத்துவம், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டம், கலைஞர் கனவு இல்லத் திட்டம், சாலை மேம்பாட்டுப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தின்போது. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களின்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து திடீராய்வு மேற்கொண்டு, வேலூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களைச் சேர்ந்த மனுதாரர்களிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்களது கோரிக்கை விவரங்கள் குறித்து கேட்டறிந்ததுடன், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடன் நடவடிக்கை எடுத்திட அறிவுறுத்தினார்.