அம்பேத்கர் மீது திமுகவுக்கு மரியாதை இருந்தால் அரசின் திட்டங்களுக்கு அவரது பெயரைச் சூட்டுவதற்கு திமுக அரசு தயாரா? – பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி!!

சென்னை:
அம்பேத்கர் மீது திமுகவுக்கு மரியாதை இருந்தால் அரசின் திட்டங்களுக்கு அவரது பெயரைச் சூட்டுவதற்கு திமுக அரசு தயாரா? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கர் தான் பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கைவழிகாட்டி. இந்தியாவிலேயே பட்டியலினத்தவர் அல்லாதவரால் தொடங்கப் பட்ட கட்சிக்கு அண்ணல் அம்பேத்கரை கொள்கை வழிகாட்டியாக ஏற்றுக்கொண்ட ஒரே கட்சி பாட்டாளி மக்கள் கட்சி தான். அவர் மீது கொண்ட மதிப்பால் எங்கள் வீட்டு வளாகத்தில் அவரது உருவச் சிலையை அமைத்திருக்கிறோம்.

தமிழ்நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட சிலைகளை திறந்திருக்கிறோம். அரியலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 7 இடங்களில் அம்பேத்கர் சிலைகளை நான் திறந்தேன். ஆனால், அண்ணல் அம்பேத்கரின் பெருமைகளை காப்பதற்காக பிறந்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் திமுக அண்ணல் அம்பேத்கருக்காக என்ன செய்தது?

1949&ஆம் ஆண்டில் திமுக தொடங்கப்பட்டது. அதன்பின் 1989ஆம் ஆண்டில் தான் பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டது. இடைப்பட்ட 40 ஆண்டு காலத்தில் அண்ணல் அம்பேத்கரைப் பற்றி திமுக எத்தனை முறை பேசியது.

இந்தியா முழுவதும் சட்டக் கல்லூரிகளுக்கு அம்பேத்கர் பெயர் சூட்டும் வழக்கம் ஏற்பட்ட பிறகு தான் 1990&ஆம் ஆண்டில் சென்னை சட்டக்கல்லூரிக்கும், 1997&ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட சட்டப்பல்கலைக்கழகத்திற்கும் அம்பேத்கரின் பெயரை திமுக சூட்டியது.

இன்று வரை திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் அம்பேத்கருக்கு சிலை அமைக்கப்படவில்லை. 2021&ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 40&க்கும் மேற்பட்ட திட்டங்கள் மற்றும் கட்டிடங்களுக்கு கலைஞர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

கலைஞரின் பெயர் மட்டுமல்ல, தமிழகத்தின் நலனுக்கு எந்த பங்களிப்பும் செய்யாத அவரது தாயார் பெயரிலும் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால், எந்த புதிய திட்டத்திற்கும், கட்டிடங்களுக்கும் அண்ணல் அம்பேத்கர் பெயர் சூட்டப்படவில்லை.

இது தான் அண்ணலுக்கு செலுத்தும் மரியாதையா? என திமுக அரசு விளக்க வேண்டும். சென்னை கிண்டி மருத்துவ மனை, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் உள்ளிட்ட கட்டிடங்களுக்கும், அரசின் திட்டங்களுக்கும் அண்ணல் அம்பேத்கரின் பெயரை திமுக அரசு சூட்ட வேண்டும். திமுக அரசு செய்யுமா? என குறிப்பிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *