திருச்சி,
திருச்சி, சூரியூர் ஜல்லிக்கட்டில் வெற்றிபெற்ற முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் காளைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பரிசு வழங்கினார்.
ஒவ்வொரு ஆண்டும் மாட்டு பொங்கல் தினத்தன்று திருச்சி மாவட்டம் சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும்.
திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் முதல் ஜல்லிக்கட்டு போட்டி என்பதால் இது மிகவும் புகழ்பெற்றதாகும். திருச்சி மட்டுமல்லாது புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், கரூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து மாடுகள் சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும்.
இந்தாண்டிற்கான சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வருவாய் கோட்டாட்சியர் அருள் ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
போட்டி தொடங்கும் முன் ஜல்லிக்கட்டு வீரர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். போட்டி தொடங்கியதும் முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதனை தொடர்ந்து போட்டியில் பங்கேற்க வந்த காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
இந்நிலையில் திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டில் வெற்றிபெற்ற முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் ’கொம்பன்’ காளை வெற்றி பெற்றது. இதனையடுத்து அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பரிசு வழங்கினார்.