திண்டிவனம்
திண்டிவனத்தில் சாலையில் நடந்து சென்று முதலமைச்சர் ஸ்டாலின் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
அதனை தொடர்ந்து திமுக நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களில் சுற்று பயணம் மேற்கொண்டு ரோடு ஷோ மூலமாக ஒரு கிலோமீட்டர் தூரம் நின்ற பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று வந்தார்.
குறிப்பாக மாற்று திறனாளிகள் பலரிடம் கோரிக்கை மனுக்களை பெற்று உடனடி நடவடிக்கைக்கும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதனடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை புரிந்த முதலமைச்சர் ஸ்டாலின் ஒலக்கூர் பகுதியில் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்தார்.

அப்போது படுக்கை வசதி, மருத்துவமனை ஊழியர்கள் வருகை பதிவேடு, நோயாளிகள் பதிவேடு, கழிப்பறைபகுதிகளில் ஆய்வு செய்தார். ஆய்விற்கு பிறகு திண்டிவனத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பொதுமக்களிடம் சாலையில் நடந்தே சென்று குறைகேட்பு மனுக்களை பெற்றார்.
குறைகேட்பு மனு பெற்றபோது கோலாட்டம் ஆடிய பெண்களுடன் சிறிது வினாடிகள் கோலாட்டம் அடித்தும், குழந்தை ஒன்றை தன் கையால் தூக்கி மகிழ்ந்தார். மாற்றுதிறனாளி ஒருவரிடம் மனு பெற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், உடனடியாக செய்து தர உத்தரவிட்டார்.
அதன் பின்பு தனியார் திருமண மண்டபத்தில் திமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் , வனத்துறை அமைச்சர் க.பொன்முடி மாவட்ட செயலாளர்கள் கெளதமசிகாமணி, சேகர், ஜெகத் ரட்ச்கன் எம்.பி, சட்டமன்ற உறுப்பினர்கள் செஞ்சி மஸ்தான், டாக்டர்.லட்சுமணன் , அன்னியூர் சிவா,ஒன்றிய தலைவர்கள், ஒன்றிய செயலாளர்கள், நகர பேரூராட்சி கழக செயலாளர்கள் அணி என செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெறுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டன.
கூட்டத்தில் கலந்துக்கொண்ட சுமார் 90 நிர்வாகிகளுடன் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
கூட்டத்தினை முடித்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் நாளை விழுப்புரம் ஜானகிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் புதியதாக கட்டப்பட்டுள்ள 21 இடஒதுக்கீடு தியாகிகள் மணி மண்டபம் முன்னாள் அமைச்சர் ஏ. கோவிந்தசாமி நினைவு மணி மண்டபத்தினை காலையில் திறந்து வைத்து 35 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
மணி மண்டபம் திறப்பு விழாவிற்கு முன்பாக சாலையில் நடந்து சென்று மக்களிடம் கோரிக்கை மனுக்களை ஸ்டாலின் பெறுகிறார்.
அதனை தொடர்ந்து அங்கே நடைப்பெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அரசு சார்பில் பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.321 கோடி மதிப்பில் 36 ஆயிரம் பயணாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.