சென்னை:
தமிழகத்தில் 2,553 மருத்துவர்களை தேர்ந்தெடுக்க நடத்தப்பட்ட தேர்வு முடிவு விரைவில் வெளியிடப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: 2,553 மருத்துவ பணியிடங்களை நிரப்புவதற்கு 24,000 மருத்துவர்கள் கடந்த ஜனவரி மாதம் 5-ம் தேதி தேர்வு எழுதியுள்ளனர். விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெறுகிறது.
கரோனா தொற்று காலத்தில் பணியாற்றியவர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்கப்பட இருப்பதால், மதிப்பெண்கள் வேண்டி விண்ணப்பித்தவர்களின் விவரங்கள் சரிப் பார்க்கும் பணிகள் நடக்கின்றன. 10 நாட்களில் பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் முடிவுகள் வெளியிடப்படும்.
எந்தெந்த அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் மருத்துவர் இடங்கள் தேவைப்படுகிறதோ அந்த விவரங்கள் மற்றும் கூடுதலாக மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கான அவசியம் குறித்து மத்திய அமைச்சரிடம் தெரிவிக்கப்படும்.
தமிழகம் பின்னுக்கு வருவதாற்கான காரணமே மத்திய அரசு தான். முடிந்தால் தமிழிசை, மத்திய அமைச்சர் நட்டாவிடம் எடுத்து சொல்லி, தமிழகத்துக்கு 6 மருத்துவக் கல்லூரிகள் வழங்குவதற்கு உறுதுணையாக இருந்தால் நல்லது. இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.