சென்னை:
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் வைக்கப்படாததால் இபிஎஸ்-க்கு நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்கவில்லை என்ற முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் கருத்துக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார்.
கோவை அன்னூரில் அவினாசி-அத்திகடவு திட்ட குழு சார்பில் எடப்பாடி பழனிச்சாமிக்கு நேற்று பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்காத நிலையில், அவர் புறக்கணித்ததாக தகவல் வெளியானது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் வைக்கப்படாததால் விழாவில் பங்கேற்கவில்லை என அவர் விளக்கம் அளித்து இருந்தார்.
இந்த நிலையில், செங்கோட்டையனின் குற்றச்சாட்டுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது: அத்திக்கடவு திட்டம் நிறைவேறியதற்கு ஜெயலலிதா, எடப்பாடிதான் காரணம். பாராட்டு விழாவில் அரசியல் கலக்கக் கூடாது என்பதால் படங்கள் வைக்கப்படவில்லை.
திட்டத்திற்காக போராடிய விவசாயிகள் சங்கத்தினர் பாராட்டு விழாவை நடத்தினர். அனைத்துக் கட்சி விவசாயிகளும் பங்கேற்றதால் அரசியல் கலக்கக் கூடாது என்பதே நோக்கம்.
அதிமுக சார்பில் பாராட்டு விழா நடந்தால் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் வைக்கப்பட்டிருக்கும் என கூறினார்.