கடந்த 10 வருடத்தில் தமிழக த்துக்கு 5 லட்சம் கோடி நிதி வழங்கினோம்; மத்திய அமைச்சர் அமித் ஷா!!

கோவை ;

தமிழ்நாடு பாஜகவின் கோவை அலுவலக திறப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா திருவண்ணாமலை மற்றும் ராமநாதபுரத்தில் உள்ள பாஜகவின் புதிய அலுவலகங்களையும் காணொளிக் காட்சி மூலம் திறந்துவைத்தார்.

விழாவில் பேசிய அமித் ஷா, மத்திய அரசு தமிழகத்திற்கு நிதியை விடுவிக்க மறுத்ததாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறிய குற்றச்சாட்டுகளை நிராகரித்தார். “மு.க. ஸ்டாலினின் அறிக்கையில் எந்த உண்மையும் இல்லை. மோடி அரசு தமிழகத்திற்கு ரூ.5 லட்சம் கோடி வழங்கியுள்ளது” என்றார்.

“மத்திய அரசால் தமிழ்நாட்டுக்கு அநீதி இழைப்பதாக முதல்வர் அடிக்கடி கூறுகிறார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிகளில் வழங்கப்பட்ட நிதியை ஒப்பிட்டுப் பார்த்தால், உண்மையான அநீதி ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது நடந்தது என்று வெளிப்படையாகத் தெரியும்” என்று அமித் ஷா கூறினார்.

தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் மத்திய அரசு நியாயமற்ற முறையில் நடந்துகொள்வதாகக் கூறிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் குற்றச்சாட்டுகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நிராகரித்துள்ளார்.

ஸ்டாலினின் கருத்துக்கள் திசைதிருப்பும் தந்திரம் என்றும் அவர் சாடினார்.

நரேந்திர மோடி அரசு 2014 முதல் 2024 வரை தமிழ்நாட்டிற்கு ரூ.5,08,337 கோடியை ஒதுக்கியதாகவும் அமித் ஷா கூறினார்.

தொகுதி மறுவரையறை தொடர்பாக ஸ்டாலின் தவறான தகவல்களை பரப்புவதாகவும் ஷா குற்றம் சாட்டினார்.

தொகுதி மறுவரையறை விகிதாச்சார அடிப்படையில் நடத்தப்படும்போது, ​​தமிழ்நாடு உட்பட எந்த தென் மாநிலத்திற்கும் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறைக்கப்படாது என்று அவர் தெளிவுபடுத்தினார்.  

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து ஆளும் திமுக அரசாங்கத்தை விமர்சித்த ஷா, தமிழ்நாட்டில் தேச விரோத போக்குகள் எல்லா நேரத்திலும் உச்சத்தில் இருப்பதாக விமர்சித்தார். 

“1998 குண்டுவெடிப்பு குற்றவாளியின் (எஸ். ஏ. பாஷா) இறுதி ஊர்வலத்தின்போது தமிழ்நாடு அரசு பாதுகாப்பு அளித்தது” என்று உள்துறை அமைச்சர் கூறினார்.

மாநிலத்தில் போதைப்பொருள் மாஃபியா சுதந்திரமாக செயல்பட்டு வருவதாகவும், சட்டவிரோத சுரங்க மாஃபியா இங்கு அரசியலை ஊழல் நிறைந்ததாக மாற்றுவதாகவும் அவர் கூறினார்.

திமுகவின் அனைத்து தலைவர்களும் ஊழலில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளனர் எனவும் அவர் சாடினார்.

மக்களவை தொகுதி மறுவரையறை தொடர்பாக மார்ச் 5ஆம் தேதி தமிழக அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அறிவித்துள்ளது பற்றியும் அமித் ஷா விமர்சித்தார். 

தமிழக மக்கள் பல பிரச்சினைகளால் துன்பப்படும் நிலையில் முதல்வரும் அவரது மகனும் (உதயநிதி) மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப புதிய பிரச்சினைகளை கையில் எடுத்துள்ளனர் என்று அமித் ஷா குறைகூறினார். 

தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு எந்த தென் மாநிலமும் ஒரு இடத்தைக்கூட இழக்காது என்பதை மோடி அரசாங்கம் மக்களவையில் தெளிவுபடுத்தியுள்ளது என்று அமித் ஷா கூறினார்.

அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரும் என்றும், மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் பெற்ற வெற்றிகளை விட இங்கு கிடைக்கும் வெற்றி பெரியதாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

“தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைவதற்கு தயாராகுங்கள். 2026ஆம் ஆண்டில், ஒரு தேசிய ஜனநாயக கூட்டணி அரசை நிறுவுவோம்.

தமிழ்நாட்டில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவோம். தமிழ்நாட்டில் ஊழல் ஒழிக்கப்படும்.

நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களை தமிழ்நாட்டிலிருந்து அகற்ற நாங்கள் உறுதி எடுத்திருக்கிறோம்” என்று அமித் ஷா கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *