”ஷமியை பாராட்டிய அஸ்வின்”!!

சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் போட்டி நேற்று துபாயில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 249 ரன்களை எடுத்தது.

எளிய இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்தப் போட்டியில் இந்திய வீரர் முகமது ஷமி பந்துவீசிய விதத்தை முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் வெகுவாக பாராட்டியுள்ளார். மேலும், முகமது ஷமியின் பந்துவீச்சு பல வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பெரும் பாடமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “பல வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஒரு சிறந்த பாடமாக இருக்கக்கூடிய மாஸ்டர் கிளாஸ் தர சீரமைப்பு.
முதல் படம் ஷமி ஒரு கோணத்தில் இருந்து கிரீசை எவ்வாறு தாக்குகிறார் என்பதைக் காட்டுகிறது.

இரண்டாவது படம் ஆங்குலர் ரன் அப் காரணமாக அவர் எவ்வாறு வசதியாக ஒரு சைட் ஆன் பொசிஷனுக்கு நகர்ந்துள்ளார் என்பதைக் காட்டுகிறது.

மேலும் மூன்றாவது படம் அவரது மணிக்கட்டு எப்படி சரியான தலைகீழாக சுழல்கிறது என்பதைக் காட்டுகிறது.

இதன் வெளிப்பாடு கடைசி படத்தில் அந்த இன்வெர்ஷன் எவ்வளவு கச்சிதமாக வந்துள்ளது என்பதை காட்டுகிறது. அவர் பந்து வீசுவதை பார்க்கவே மிகவும் அழகாக இருக்கிறது,” என குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய போட்டியில் நியூசிலாந்து அணி 45.3 ஓவர்களில் 205 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

இந்தியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி தோல்வியை சந்திக்காமல் அரையிறுதி சுற்றில் களமிறங்க உள்ளது.

அரையிறுதி சுற்றில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டு விளையாட உள்ளது. இந்தப் போட்டி நாளை (மார்ச் 4) துபாயில் நடைபெறுகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *