சென்னை:
கரூர் போன்ற துயர சம்பவம் இனி நடக்கக் கூடாது என்ற உறுதியை அனைத்து அரசியல் இயக்கங்களும் எடுக்க வேண்டும். மக்களின் உயிரே முக்கியம். மக்களின் உயிரே விலைமதிப்பற்றது என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று நேரமில்லா நேரத்தில் கரூர் துயர சம்பவம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
நான் எனது 50 ஆண்டுகால பொதுவாழ்க்கையில் எத்தனையோ நிகழ்ச்சிகளைப் பார்த்திருக்கிறேன், நடத்தியும் இருக்கிறேன். இங்குள்ள அனைத்துஅரசியல் இயக்கங்களை சேர்ந்தவர்களும் இத்தகைய அனுபவம் கொண்டவர்கள்தான்.
மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தும்போது, அதற்குரிய சட்ட திட்டங்களுக்கும், நெறிமுறைகளுக்கும், பொது ஒழுக்கங்களுக்கும் கட்டுப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன.
கட்டுப்பாடுகளை மீறும்போது, அதனால் பாதிக்கப்படுவது நிகழ்ச்சி நடத்தும் கட்சியின் தொண்டர்கள்தான், நமது தமிழக மக்கள்தான்.
சமூக வலைத்தளங்களில் தேவையற்ற வதந்திகள் பரவியபோது, அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வீடியோ மூலமாக எந்த அரசியல் கட்சி தலைவரும் தன் கட்சி தொண்டர்களும், அப்பாவி பொதுமக்களும் இறப்பதை விரும்பமாட்டார்கள் என்றுதான் நான் குறிப்பிட்டேன்.
அதுமட்டுமின்றி, அரசின் உயர் அலுவலர்கள், காவல் துறை உயர் அலுவலர்கள் செய்தியாளர்களைச் சந்தித்து உண்மை நிலையை வீடியோக்களுடன் ஆதாரத்தோடு தெளிவுபடுத்தினார்கள்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனைவரையும் காத்தது நமது அரசு. அனைவருக்கும் உரிய சிகிச்சை அளித்தது நமது அரசு.
உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் அரசு செயல்படும். அதே நேரத்தில் இதுபோன்ற துயர சம்பவம் இனி நடக்கக்கூடாது என்ற உறுதியை அனைத்து அரசியல் இயக்கங்களும், பொது அமைப்புகளும் எடுக்க வேண்டும்.
அனைத்தையும்விட மக்களின் உயிரே முக்கியம். மக்களின் உயிரே விலைமதிப்பற்றது. இதை மனதில் வைத்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.